இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

April 11, 2023

சொந்தப் பணத்தில் ஸ்மார்ட் வகுப்பறை; அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் சாலமன்!

நன்றி: Vikatan

வெளியிடப்பட்டது: 15 Mar 2023

தமிழக அரசு, அனைவருக்கும் கல்வி கிடைக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் உள்ள மலைக்கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு தடையின்றி கல்வி கிடைப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.

இந்நிலையில், குழந்தைகளை தடையின்றி பள்ளிக்கு வரவழைக்கும் நோக்குடன் ஆங்கிலப் பள்ளிக்கு நிகராக, தனது சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கி மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறார் திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சாலமன் ஜோசப் (45).

திண்டுக்கல்லில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள சிறுமலைக்கு 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும். இங்கு மிளகு, மலை வாழை, எலுமிச்சை அதிக பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. அண்ணாநகர், பழையூர், சிறுமலை புதூர், தென்மலை, பொன்னுருக்கி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன.

அதுமட்டுமல்லாது தாளக்கடை, நொண்டிப்பள்ளம், பொன்னுருக்கி உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடி மக்களும் அதிகமாக வசிக்கின்றனர். இந்தப் பகுதி குழந்தைகளுக்காக 1955-ம் ஆண்டில் சிறுமலை புதூர், அண்ணாநகர் பகுதிகளில் அரசு தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன.

பெரும்பாலும், பழங்குடிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் தொடக்கக்கல்வியைக் கடக்க முடியாத சூழல் இருந்தது.

மலைப்பகுதிகளில் நல்ல சாலை வசதி அமைக்கப்பட்ட பிறகு இங்குள்ள பள்ளிகளில் குழந்தைகள் இரண்டிலக்க எண்ணிக்கையில் கல்வி பயிலத் தொடங்கினர்.

இத்தகைய சூழலில்தான் ஆசிரியர் சாலமன் ஜோசப், ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கி மாணவர்களுக்கு கற்றல் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவரிடம் பேசினோம்…

2004-ம் ஆண்டு ஆசிரிய பணியில் சேர்ந்து, 8 ஆண்டுகள் சேலம் மாவட்டத்தில் பணியாற்றினேன். அடுத்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் பெற்று வந்தேன். கொரோனா காலத்தில்தான் சிறுமலை புதூர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளிக்கு பணியிடம் மாற்றப்பட்டது.

அப்போது முதல் இங்குள்ள குழந்தைகளின் நிலை அறிந்து அவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் சேர்த்து விழிப்புணர்வு அளிக்கத் தொடங்கினேன். அவர்களுக்கு ஆதார், சாதிச் சான்றிதழ், கல்வி உதவித் தொகை கிடைக்கச் செய்கிறேன். தோட்ட தொழிலாளர்களின் வீடுகளில் மின்சார வசதிகூட இருப்பதில்லை. ஒரு சிலரின் வீடுகளில்தான் டிவிகூட இருக்கிறது. இப்பகுதியில் நெட்வொர்க் பிரச்னை இருப்பதால் செல்போன் பயன்படுத்துவதிலும் சிக்கல் உள்ளது.

கல்வி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கடந்த 3 ஆண்டுகளாக வகுப்பறைகளில் எனது சொந்த செலவில் வண்ணம் அடித்து, குழந்தைகளைக் கவரும் வகையில் தமிழ், ஆங்கில எழுத்துகள், எண்கள், அடிப்படை கணிதம், விலங்குகள், பறவைகள் பெயர்கள், மாநில, மாவட்ட பெயர்களை எழுதியும் வரைந்தும் வைத்தேன்.

அது குழந்தைகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குழந்தைகள் மிகவும் ஆர்வமாக பயிலத் தொடங்கினர். இதையடுத்து தான் அவர்களின் கற்றல் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்க முடிவெடுத்தேன். எனது சொந்த பணத்தில் ஸ்மார்ட் டிவி, புரொஜெக்டர், ஸ்கிரீன், ஸ்பீக்கர்கள் என ஒவ்வொன்றாக வாங்கினேன். பிறகு பள்ளிக் கட்டடத்தின் மாடியில் உள்ள ஒரு பகுதியை ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றினேன்.

கடந்த ஒரு மாதமாகக் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறையில் பாடம் எடுத்து வருகிறேன். அவர்கள் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் வருகின்றனர். பாடங்களை கரும்பலகையிலும், பாடப்புத்தகங்களை வைத்துக் கொண்டும் பாடங்கள் நடத்துவதைவிட, பாடங்களை அனிமேஷன் காட்சிகளாக, இசையுடன் சேர்ந்துப் பார்க்கும்போது அவர்களால் எளிதாக உள்வாங்கிக்கொள்ள முடிகிறது.

ஆங்கில வார்த்தைகளை எல்லாம் மிகவும் தெளிவாக பிழையின்றி உச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அறிவியல் பாடங்களை தேவையான படங்களைக் காட்டி செய்முறை விளக்கக் காட்சிகளுடன் நடத்தும்போதும் அவர்களுக்கு எளிதில் புரிகிறது. இதுபோல என்னால் முடிந்த அளவுக்கு மலைவாழ் குழந்தைகளின் கல்விக்காக செய்ய முடிவெடுத்துள்ளேன்’’ என்றார்.

Copyright © 2023 KalviApp. All rights reserved.