‘நீ என்ன பெரிய கலெக்டரா?’ என்ற கேள்வியை நாம் பல இடங்களில் எதிர்கொண்டி ருக்கக்கூடும். அதென்ன பெரிய கலெக்டர்? கலெக்ட ராவதற்கு அப்படி என்னதான் படிக்க வேண்டும்?
இந்தியக் குடிமைப் பணிகளில் இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS)உள்ளிட்ட அனைத்து மத்திய அரசின் 17 வகை ‘ஏ’ தொகுதிப் பணிகளும் 6 வகை ‘பி’ தொகுதிப் பணிகளும் அடங்கும். இவற்றில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய மூன்றும் ‘அனைத்து இந்தியப் பணிகள் சட்டம் 1951’-ன் கீழ் அமைபவை.
பிரிட்டிஷ் காலத்தில் ICS (Indian Civil Service)என்று குறிப்பிடப்பட்ட இந்தப் பணி, சுதந்திர இந்தியாவில் இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service) என்று பெயர் மாறியது. இந்திய வனப் பணி (IFS) 1966-ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டது.
இந்தத் தேர்வுகளை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)ஆண்டு தோறும் நடத்துகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவில் முதல் போட்டித்தேர்வு 1947-ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. 2000 பேர் எழுத்துத் தேர்வை எழுதினர். அதிலிருந்து இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 பேர் உட்பட மொத்தம் 150 பேர் 1948-ல் பணியேற்றனர். ஐஏஎஸ்ஸுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 6 பேர்.
இந்தியக் குடிமைப் பணித் தேர்வு எழுதுவதற்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஓர் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம். முதற்கட்டத் தேர்வில் பொது அறிவு வினாக்கள் பட்டப்படிப்பு அளவிலும், முதன்மைத் தேர்வில் விருப்பப் பாடங்களின் வினாக்கள் முதுநிலைப் பட்டப்படிப்பு அளவிலும் அமைந்திருக்கும் என்று தேர்வாணையம் வரையறுத்திருக்கிறது.
முதற்கட்டத் தேர்வு (Preliminary Exam) எனும் கொள்குறிவகை வினாத் தேர்வாகும். முதன்மைத் தேர்வு (Main Exam) 9 தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்திய வனப் பணிக்கான முதன்மைத் தேர்வு, ஆறு தாள்கள் கொண்டது. அது தனியாக நடத்தப்படுகிறது. இந்தியக் குடிமைப் பணிக்கான முதற்கட்டத் தேர்வில் தேறியவர்கள் மட்டுமே இந்திய வனப்பணிக்கான முதன்மைத் தேர்வை எழுத இயலும்.
முதற்கட்டத் தேர்வு வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருக்கும். முதன்மைத் தேர்வு வினாத்தாளும் அப்படியே. ஆனால், முதன்மைத் தேர்வை, தேர்வர்கள் விரும்பினால் இந்திய அரசமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள எந்த மொழியிலும் (தமிழ் உட்பட) எழுதலாம். ஆளுமைத் தேர்வையும் ஆங்கிலம் அல்லது ஏதேனும் ஓர் இந்திய மொழியில் எதிர்கொள்ளலாம். முதன்மைத் தேர்விற்கான விருப்பப்பாடப் பட்டியலில் வேளாண்மை, கால்நடை மருத்துவம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட 26 பாடங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றிலிருந்து ஏதேனும் ஒரு பாடத்தையோ, 23 மொழிகளின் இலக்கியப் பாடங்களில் ஏதேனும் ஒன்றையோ விருப்பப்பாடமாக எடுத்துக் கொள்ளலாம். விருப்பப்பாடத்தில் இரண்டு தாள்கள் இடம்பெறும்.
குடிமைப் பணித் தேர்வை 21 வயது முதல் 32 வயது வரை எழுதலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 37 வயது வரை எழுதலாம். இதர பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு 35 ஆகும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பில் பத்து வருடம் சலுகை உண்டு. முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களோ அந்த வகுப்புக்கான வயது உச்சவரம்பிலிருந்து ஐந்து ஆண்டுகள் கூடுதலாக வழங்கப்படும்.
பொதுப்பிரிவினர் ஆறு முறையும், இதர பிற்படுத்தப் பட்டோர் ஒன்பது முறையும் தேர்வெழுதலாம். பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவர் 21 – 37 வயது வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். தேர்வுக்கு விண்ணப்பித்தவர் முதற்கட்டத் தேர்வை எழுதினால்தான் தேர்வு முயற்சியாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பித்து விட்டு முதற்கட்டத் தேர்வை எழுதா விட்டால் அது வாய்ப்புமுறைக் கணக்கில் வராது.
தவறான விடைகளுக்கு எதிர் மதிப்பெண், தகுதித்தாள்கள் ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்ச மதிப்பெண், இயங்கியல் தன்மைமிக்க வினாக்கள் (Questions of Dynamic Nature) தேர்வின் ஒருகட்டத்தில் தவறிவிட்டாலும், அடுத்த ஆண்டில் தேர்வை முதற்கட்டத்திலிருந்தே எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் என்று பல சவால்களை இந்தத் தேர்வு, தேர்வர்களுக்கு முன்வைக்கிறது. பள்ளிப் பாடங்களில் பெறுவதுபோல 95, 98 சதவிகித மதிப்பெண்ணை இத்தேர்வில் பெறமுடியாது. சுமார் 40 முதல் 50 சதவிகித மதிப்பெண்ணே கட்-ஆஃப் மதிப்பெண்ணாக அமையும்.
முதற்கட்டத் தேர்வு எழுதுபவர்களில் சுமார் 3 சதவிகிதம் பேர் மட்டுமே முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெறுகிறார்கள். 97 சதவிகிதம் பேர் முதற்கட்டத் தேர்வைத் தாண்டுவதில்லை.
முதற்கட்டத் தேர்வு எழுதுபவர்களில் 0.2 சதவிகிதம் பேர் மட்டுமே இறுதி வெற்றியாளர்களாக இருப்பதைக் கொண்டு இந்தத் தேர்வின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளலாம். 1970-க்குப் பிறகு இந்தத் தேர்வில் தமிழக மாணவர்களின் வெற்றி விகிதம் குறையத் தொடங்கியது. திறமையான மாணவர்களை இளம் வயதிலேயே அடையாளம் கண்டு ஊக்குவிப்பது, ஆங்கிலப் புலமையை அதிகரிப்பது போன்றவற்றால் மீண்டும் தமிழக மாணவர்களை எழுச்சிபெறச் செய்யலாம்.
காலத்திற்கேற்ப புதுப்புது மாற்றங்களுக்கு உள்ளாகிய இந்தத் தேர்வில் வெற்றிபெற, கடின உழைப்பு, அறிவாற்றல், தொடர் வாசிப்பு, தகவல் பரிமாறும் திறன், அறச்சிந்தனை, பொறுமை, நேர்மை போன்றவை மிக மிக அவசியம்.
— நன்றி விகடன்