இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

August 27, 2018

போட்டித் தேர்வுக்கான மூலதனங்கள்!

போட்டித் தேர்வுக்கான மூலதனங்கள்!

போட்டித் தேர்வுகளுக்காக உங்களை தயார்படுத்திக்கொள்ளத் தேவையான முக்கிய தலைப்புகள் அனைத்தையும் முழுமையாக அலசிவிட்டோம். எங்கு சுற்றினாலும் எவற்றையெல்லாம் பார்த்தாலும், எவ்வித வியூகங்களை வகுத்தாலும் இறுதியில், ‘உழைப்பு’ என்ற ஒற்றைப் புள்ளியில்தான் வந்து நிற்கும். எவ்வளவு புத்திசாலிகளாகவும் சாமர்த்தியசாலிகளாகவும் இருந்தாலும், போட்டித்தேர்வுகளுக்குத் தேவையான அனைத்து பாடத்திட்டங்களையும் படித்து முடித்து, உரிய இடைவேளைகளில் படித்தவற்றை நினைவூட்டல் செய்து, தேர்வின் சரியான தருணங்களில் வெளிப்படுத்தும் முறைகளில்தான் நம்முடைய வெற்றி தோல்விகள் அமைந்திருக்கின்றன.

நம்முடைய உடல் எடை, திடீரென ஒருநாள் சற்று அதிகமாகியிருப்பதை உணர்கிறோம். தினமும் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகளின்மூலம் இரண்டு மாதங்களில் ஐந்து கிலோ எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறோம். நம் இலக்குக்குத் தேவையான அட்டவணைகள், பொருள்கள் என அனைத்தையும் திட்டமிட்டு வைத்துக்கொள்கிறோம். எல்லாமே தயார். ஆனால், தினமும் திட்டத்துக்கு ஏற்றவாறு செயல்படாத வரையில் அது திட்டமாக மட்டும்தான் இருக்கும். அட்டவணை அழகாக உள்ளது என்பதற்காக எடை குறைவதற்கு வாய்ப்பில்லை. திட்டத்துக்கு ஏற்றவாறு உழைத்தால் மட்டுமே குறையும். போட்டித் தேர்வுகளில் நமது வெற்றியும் அதேபோலத்தான். பாடத்திட்டங்களுக்கு ஏற்றவாறு நேரம் ஒதுக்கி படித்து முடிப்பதற்கு மாற்றும் இல்லை, வழியும் இல்லை.

நான் இறங்கிப் படிக்கத் தயார். ஆனால், என் சூழ்நிலை அதற்கு உகந்ததாக இல்லையே’ என நினைத்து முயற்சிகளை ஒருபோதும் தள்ளிப்போட வேண்டாம். இக்கட்டான சூழ்நிலைகளை நம்முடைய மன உறுதியால் முறியடிக்கும்போதுதான், சாதனையாளர்களாக மாறுகிறோம். தடைகளைத் தாண்டும் மன தைரியம், இன்னல் தரும் சூழல்களை வெல்லும் முயற்சி, நமக்கான நேரம் அமையும் வரை காத்திருக்கும் பொறுமை, எந்தக் கட்டத்திலும் நம் இலக்கையும் கனவையும் விட்டுக்கொடுக்காத நேர்மை – இவைகளைத்தான் இந்தக் கடினமான போட்டித் தேர்வுகள் வெற்றிக்கான மூலதனமாக நம்மிடம் எதிர்பார்க்கின்றன. இதே மூலதனங்களைத்தான் இலக்கை அடைந்த பின்னர் ஆற்றப்போகும் பணியும் எதிர்பார்க்கின்றது. ஆக, அரசு உயரதிகாரிகளாக நாம் ஆற்றப்போகும் மிக முக்கியமான, பலரின் வாழ்வையே மாற்றப்போகும் பணிகளுக்குத் தேவையான குணங்கள், நாம் தேர்வுக்குத் தயாராகும் நாள்களிலேயே பரிசோதிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட இந்த அடிப்படைக் குணங்களை நாம் கைவிடாமல் வளர்த்துக்கொண்டால், அறிவும் சாமர்த்தியமும் தானாக நம்மைத் தேடி வரும்.

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நேரங்களில், ‘ நாம் திட்டமிட்ட பாதையில்தான் பயணிக்கிறோமா?’ என்று நம்மை நாமே சுய பரிசோதனைசெய்து பார்த்துக்கொள்வது மிக அவசியம். சில பகுதிகளில் பின்தங்கினாலும் ‘நான் நல்லாத்தான் படிக்கிறேன்’ என்று நமக்கு நாமே பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, ஒருவித பொய்யான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்குப் பதிலாக, நம் அட்டவணைக்கு ஏற்ப பாடங்களைப் படித்துவிடுகிறோமா, அட்டவணையில் ஏதாவது மாற்றங்கள் தேவையா, படித்த அனைத்தையும் நம்மால் நினைவுகூற முடிகிறதா, மாதிரித் தேர்வுகளில் நமது செயல்பாடுகள் எப்படி, இன்னும் எவற்றில் எல்லாம் நாம் முன்னேற வேண்டும் நமக்கு நாமே கேள்விகள் எழுப்பி அதற்கான நேர்மையான பதில்களை பதிவுசெய்து வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். இப்படித் தொடர்ந்து செய்தால், நாம் பின்தங்கும் பகுதிகளிலும் முன்னேற்றம் காண முடியும்.

திட்டமிட்டு அட்டவணையைத் தயார் செய்யும்போது, நம்மால் குறிப்பிட்ட நேரத்தில் படிக்கக்கூடிய பாடங்களை மட்டும் அன்றைய அல்லது வார இலக்குகளில் சேர்த்துக்கொள்ளுங்கள். நம் சக்திக்கும் ஆற்றலுக்கும் மீறிய அளவு பாடங்களை அட்டவணையில் சேர்ந்துவிட்டுப் பாடங்களையும் படித்து முடிக்காமல், அட்டவணையையும் பின்பற்ற முடியாமல் சோர்வு ஏற்படும் நிலைக்கு தள்ளப்படுவதற்குப் பதிலாக, நம் ஆற்றலுக்கும் சக்திக்கும் உகந்த அளவு பாடங்களை மட்டும் அட்டவணைகளில் ஏற்றி, குறித்த நேரத்தில் நமது அன்றாட இலக்குகளை எட்டி, நம் வெற்றியை நோக்கித் தன்னம்பிக்கையோடு முன்னேறலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் காலகட்டங்களில், மனநிலையை உற்சாகமாக வைத்திருப்பது மிக அவசியம். அத்தகைய உற்சாகமான மனநிலைக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் சற்று தள்ளியே வையுங்கள்.

தனியாக படிப்பது, நண்பர்களுடன் சேர்ந்து படிப்பது, வீட்டில் மட்டுமே படிப்பது, கோச்சிங் சென்டரில் படிப்பது, வேலை பார்த்துக்கொண்டே படிப்பது, வேலையை விட்டுவிட்டுப் படிப்பது என்று நம் மனநிலைக்கும் நமது சூழலுக்கும் ஏற்றவாறு எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், படிப்பது முக்கியம். பல லட்சம் பேர் எழுதும் தேர்வுகள் என்பதால், கடினமான போட்டி நிலவத்தான்செய்யும். நாம் அமைத்துக்கொண்ட பாதையில் வெற்றி தோல்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு விடாமுயற்சியுடன், நேர்மையான, உற்சாகமான நம்பிக்கை நடை போட்டால், அந்தப் பாதையே நம்மை சாதனையாளராக மாற்றும்.

—-

நன்றி  டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

நன்றி விகடன்

Copyright © 2023 KalviApp. All rights reserved.