கரோனா.. மேன்டில்.. இக்னியஸ்.. வியப்பூட்டும் உலகப்புவியியல் – டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை
டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்
#12 முதன்மைத் தேர்வுக்கான பொதுப் பாடங்கள் – பொது மற்றும் உலகப் புவியியல் -1
வியப்புமிக்க நம்முடைய உலகத்தைப் பற்றியும் அதன் புவியியல் வடிவமைப்பை பற்றியும்தான் இந்தப் பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். 2016 மற்றும் 2017-ம் ஆண்டு UPSC முதன்மைத் தேர்வுகளில் தலா 1 கேள்வி மட்டுமே இந்தப் பகுதியில் இருந்து கேட்கப்பட்டாலும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் 13 கேள்விகள் வரை ( UPSC 2013 ) கேட்கப்பட்ட பகுதி இது. ஆக, நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். உலகப் புவியியலைப் பற்றி எளிமையாக ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் கடந்த பகுதிகளில் இந்திய அளவில் பார்த்தோம் இல்லையா, அந்தத் தலைப்புகளை எல்லாம் உலக அளவில் உள்ள எடுத்துக்காட்டுகளுடன் பார்க்க வேண்டும்.
உலகைப் பற்றித் தெரிந்து கொள்ளும்முன் இந்த உலகை ஓர் அங்கமாகக் கொண்டுள்ள பிரபஞ்சத்தைப் பற்றியும் அதன் அங்கங்கள், சூரிய குடும்பம், கிரகங்கள் மற்றும் கோள்கள்- அவற்றுள் சிறியவை பெரியவை, அவைகளின் சிறப்பம்சங்கள் ஆகியவற்றைத் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்.
உதாரண கேள்வி:
Statement 1 : சூரியனின் வெளிப்பகுதிக்கு பெயர் கரோனா ( corona )
Statement 2 : நட்சத்திரங்களுக்கு நடுவேயான இடைவெளியை லைட் இயர் ( light year ) மூலம் கணக்கிடுகிறோம்
Statement 3 : சூரிய குடும்பத்தின் மிக வெப்பமான கிரகம் வீனஸ் ( Venus )
1 only correct
2 only correct
1 and 3 correct
All are correct ( பதில்)
பிளாக் டுவார்ஃப் ( black dwarf), போட்டோஸ்பியர் ( photosphere ), நியூட்ரான் ஸ்டார் ( neutron star ), லேட்டிட்டியூட் ( latitude ), லாங்ட்டியூட் ( longitude ), ஈக்வினாக்ஸ் ( equinox ) போன்ற முக்கிய வரையறைகள் ( definitions) மற்றும் சொற்கூறுகள் ( terms ) ஆகியவற்றைப் பட்டியலிட்டு படித்து வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல், பூமியின் உள்பகுதியில் உள்ள கிரஸ்ட் ( crust ), மேன்டில் ( mantle ), கோர் ( core ) ஆகிய அடுக்குகள், பூமியில் உள்ள கனிமங்கள் போன்றவற்றைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
உதாரண கேள்வி:
பொருத்துக
கிரஸ்ட் – 100 கி.மீ வரை
கோர் – 2900 கி.மீ முதல் 6400 கி. மீ வரை
மேண்டில் – 100 கி.மீ முதல் 2900 கி.மீ வரை
இவற்றில் எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளன
1, 2
2,3
1,2,3 ( பதில்)
None of the above
Igneous
பூமியில் உள்ள முக்கிய பாறை வகைகளான இக்னியஸ் ( igneous ), செடிமென்டரி (sedimentary ), மெட்டமார்பிக் ( metamorphic ) ஆகியவை உருவாகும் முறைகள், உருவாகும் இடங்கள், அவைகளின் வகைகள் மற்றும் உருவகங்கள், அதேபோல, நில வடிவங்களின் கோட்பாடுகளில் முக்கியமான காண்டினெண்டல் ட்ரிஃப்ட் தியரி ( continental drift theory ), சீ ஃப்ளோர் ஸ்ப்ரெட்டிங் தியரி ( sea floor spreading theory ), ப்ளேட் டெக்டானிக் தியரி ( plate tectonic theory ) ஆகியவற்றைத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். இவைகள் எல்லாம் புவியியலின் அடிப்படை அம்சங்களை நமக்கு விளக்கும். ஃபோல்டிங் ( folding ) மற்றும் அதன் வகைகள் , ஃபால்ட்டிங் ( faulting ) அதன் வகைகள், வெதரிங் ( weathering ) அதன் வகைகள் போன்ற அம்சங்களைத் தெரிந்துகொண்டால் UPSC மற்றும் TNPSC மெயின் தேர்வுகளில் எளிதாகப் பயன்படுத்தலாம்.
மலைகளைப் பொதுவாக ஃபோல்ட் ( fold ), பிளாக் ( block ) மற்றும் வொல்கானிக் ( volcanic ) எனப் பிரிக்கலாம். ஃபோல்ட் மலைகளை 1. யங் ஃபோல்ட் ( young fold ) – உதாரணம் இமயமலை, ஆல்ப்ஸ், ஆண்டஸ் 2. மெட்ச்சுவர் ஃபோல்ட் ( mature fold ) உதாரணம் – அப்பாலாச்சியன் ( Appalachian ) மலைகள் ,தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப் ( cape ) மலைகள் 3. ஓல்டு ஃபோல்ட் ( old fold ) உதாரணம் – ஆரவள்ளி மலைத்தொடர் ( Aravalli ) , ஸ்காட்டிஷ் ( Scottish ) மலைகள். பிளாக் மலைகளைப் பொறுத்தவரை மலைகளுக்குள் ஏற்படும் விசை சக்தியால் ( tensional force ) ரிஃப்ட் ( rift ) பள்ளத்தாக்கு உருவாகிறது. உதாரணம் – ஜெர்மனியில் உள்ள பிளாக் ஃபாரஸ்ட் ( Black Forest ). இறுதியாக வொல்கானிக் மலைகள் லாவா ( lava ) படிவுகளால் உருவானவை. உதாரணம் – ஹவாய் மலைகள். மலைகளுக்கு உள்ளதுபோல பீடபூமிகள் ( plateaus), சமவெளிகள் ( plains ), தீவுகள் ( islands ), பாலைவனங்கள் ( deserts ) ஆகியவற்றின் வகைகள் மற்றும் உதாரணங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
உதாரண கேள்வி:
Statement I : 10 செ.மீட்டருக்கும் குறைவாக ஓர் ஆண்டின் மழையளவு இருந்தால் அதனைப் பாலைவனம் எனலாம்
Statement II : ஆப்பிரிக்காவில் உள்ள கலஹாரி பாலைவனம் கடலோர பாலைவனத்துக்கு ( coastal ) உதாரணமாகத் திகழ்கிறது
Statement I is correct
Statement II is correct
Both are wrong
Both are correct ( பதில் )
பொதுப் புவியியலைப் பொறுத்தவரை முதலில் விஷயங்களைப் புரிந்துகொள்வதற்குச் சற்று சிரமமாகத்தான் இருக்கும். போகப்போக அதுவே பழகிடும் என்ற வசனம்தான் இதற்குப் பொருத்தமான பதில். தலைப்புகளையும் அதில் வரும் கோட்பாடுகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்திப் படித்தால் நமது மனதில் ஆழமாகப் பதியும்.
— நன்றி விகடன்