இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

June 26, 2017

காஸ்ட் அக்கவுன்ட்டன்ட்!

இரண்டாவது உலகப் போரையட்டி தொழில் வட்டாரங்களில் புதிதாகத் தோன்றிய பெயர் காஸ்ட் அக்கவுன்ட்டன்ட்!.

போரின் முடிவில், உலகெங்கிலும் பல நாடுகளில் புதிய சீரமைப்புப் பணிகளைச் செய்வதற்கும், தொழில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தொழில் நிறுவனங்களை அறிவியல்ரீதியாக நிர்வாகம் செய்வதற்கு ‘காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுன்ட்டன்ட்’டுகள் தேவை என்பது உணரப்பட்டது. ஒரு பொருளை உருவாக்குவதற்கு எந்த அளவுக்குச் செலவு செய்யலாம், எந்த அளவுக்கு செலவுகளைக் குறைக்கலாம், எந்த அளவுக்குச் செலவுகளைச் செய்தால் சந்தையில் வெற்றிகரமாக விற்பனை செய்ய முடியும் என்பதையெல்லாம் கணக்கிட்டுச் சொல்வதுதான் ‘காஸ்ட் அக்கவுன்ட்டன்ட்’டுகளின் வேலை. சிக்கனம் மூலம் லாபம் பெற காஸ்ட் அக்கவுன்ட்டன்ட்டுகளின் தேவை அவசியம். எனவே, தொழில் நிறுவனங்களில் காஸ்ட் அக்கவுன்ட்டன்ட்டுகளின் சேவை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் காஸ்ட் அக்கவுன்ட் டன்ட்டுகளை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டரீதியான அமைப்புதான் ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அண்ட் ஒர்க்ஸ் அக்கவுன்ட் டன்ட்ஸ் ஆஃப் இந்தியா (ICWAI)’.

காஸ்ட் அக்கவுன்ட்டன்ட்டுகளை உருவாக்குவதற்காகத் தனிப் படிப்புகள் ஏதும் இருக்கிறதா?

இருக்கிறது. கொல்கத்தாவைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் ICWAI அமைப்பு இதற்கான படிப்புகளை நடத்துகிறது. நாடு முழுவதும் இதற்காகப் பல்வேறு மையங்கள் உள்ளன. சென்னையில் தென் மண்டல மையம் உள்ளது. இப்படிப்பில் சேர டிகிரி படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிளஸ் டூ படித்த மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம். அக்கவுன்ட்டிங் துறையில் ஆர்வமும், நிர்வாகத் துறையில் பணிபுரியும் மனமும், ஆய்வியல் நோக்கும் உள்ள மாணவர்களுக்கு உரிய படிப்பு இது. ஏதாவது பட்டப் படிப்பைத் தொடர்ந்தபடியே இப் படிப்பைப் படிக்கலாம். இதனால், மூன்றாண்டுகளில் இளநிலைப் பட்டப் படிப்பை முடிக்கும்போது, கூடவே காஸ்ட் அக்கவுன்ட்டன்ட் படிப்பையும் முடித்துவிட முடியும்.

இப்படிப்பின் ஃபவுண்டேஷன் கோர்ஸுக்குப் படிப்புக் காலம் ஆறு மாதம். அதையடுத்து ஓராண்டு இன்டர் மீடியட் படிப்பையும், ஓராண்டு ஃபைனல் படிப்பையும் படிக்க வேண்டும். இந்த இரண்டரை ஆண்டுக் காலத்தில் நேர்முகப் பயிற்சியும் உண்டு ( நேர்முகப் பயிற்சி மையங்கள் பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும் ). தபால் மூலமும் பயிற்சி பெறலாம்.

உலக மயமாக்கல் சூழ்நிலையில், அனைத்துத் துறைகளிலும் கம்ப்யூட்டரின் உபயோகம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதற்கு இத்துறையும் விதிவிலக்கல்ல. எனவே, இப்படிப்பைப் படிக்கும் மாணவர் களுக்கு 150 மணிநேர கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் குரூப் டிஸ்கஷன், பிஸினஸ் கம்யூனிகேஷன் போன்ற திறமைகளை மாணவர்கள் பெறவும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. எம்.பி.ஏ, எம்.சி.ஏ, ஏ.சி.எஸ், சி.ஏ. போன்ற குறிப்பிட்ட சில படிப்புகளைப் படித்த மாணவர்களுக்கு, சில பாடங்களை எழுது வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

காஸ்ட் அக்கவுன்ட்டன்ட் படிப்பு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ICWAI அமைப்பில் கிராஜுவேட் உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ளலாம். ஏற்கெனவே 3 ஆண்டு தொழில் அனுபவம் பெற்றிருந்தால் அசோஸியேட் உறுப்பினராகவும், 5 ஆண்டு அனுபவம் பெற்றிருந்தால் ‘ஃபெல்லோ’ உறுப் பினராகவும் பதிவு செய்யலாம். தற்போது 2.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் 8 ஆயிரம் பேர் வரை இறுதித் தேர்வில் பாஸ் செய்து, உறுப்பினர்களாகப் பதிவு செய்கிறார்கள்.

இப்படிப்பைப் படித்த வர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி இருக்கிறது?

அனைவருக்கும் உடனடி வேலைவாய்ப்பு உண்டு. கரூர் வைஸ்யா பேங்க், லூகாஸ் டி.வி.எஸ், அசோக் லேலண்டு, ஃபோர்டு பிஸினஸ் சர்வீஸ், ஹுண்டாய் மோட்டார்ஸ், ஜி.இ.ஏ. எனர்ஜி சிஸ்டம்ஸ், ஆர்க்கிட் கெமிக்கல்ஸ், விப்ரோ… இப்படிப் பல நிறுவனங்கள் ஐ.சி.டபிள்யூ.ஏ. படித்தவர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைக்குத் தேர்வு செய்துள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியம் உள்பட, அரசுத் துறை நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பை முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருப்பவர்கள் என யாரும் இல்லை என்றே சொல்லலாம். மேலும் விவரங்களுக்கு பார்க்க: http://icmai.in/studentswebsite/placement.php

காஸ்ட் அக்கவுன்ட்டிங் படித்து முடித்தவர்கள் தொழில் நிறுவனங்களில் என்னென்ன பதவிகள் வகிக்க முடியும்?

பொதுவாக, பொறியியல் படிப்பில் அதிக மாணவர்கள் சேருகிறார்கள் என்கிற விஷயம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், தற்போது பொறியியல் படிப்பை முடித்த பல மாணவர்கள், காஸ்ட் அக்கவுன்ட்டிங் படிக்க வருகிறார்கள் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்! தொழிற்சாலைகளில் நிர்வாகப் பணிகளுக்குச் செல்லும் போது இப்படிப்பு மிகவும் உதவியாக இருக்கும் என்று கருதியே அவர்கள் இப்படிப்பைப் படிக்கிறார்கள்.

விவரங்களுக்கு:

ஐ.சி.டபிள்யு.ஏ.ஐ. தென்னிந்திய கவுன்சில்
4, மாண்டியத் லேன், எழும்பூர்
சென்னை – 600 008.
போன்: 044-28554443,28554326
மின்னஞ்சல்: sirc@icmai.in
வலைத்தளம்:
http://icmai.in/
http://sircoficmai.in

SOUTHERN INDIA REGIONAL COUNCIL
CMA Bhawan,
4, Montieth Lane,
Egmore, Chennai – 600 008
Ph : 044-28554443,28554326
Gram :”STANDCOST”
Fax : 91- 044- 28554651
Email:sirc@icmai.in
Website: http://sircoficmai.in

Copyright © 2023 KalviApp. All rights reserved.