மதிப்பெண்ணைக் குவிக்க உதவும் டி.ஏ.எஃப்! – டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை
நேர்முகத் தேர்வுக்காக நம்மை மனதளவில் தயார்படுத்திக்கொள்ளும் முறைகளைப் பார்த்தோம். இப்போது DAF படிவத்தில் இருந்து வரக்கூடிய கேள்விகளைப் பற்றி பார்க்கலாம். DAF படிவத்தைப் பொருத்தவரை உண்மையான மற்றும் நேர்மையான தகவல்களை மட்டுமே பூர்த்திசெய்யுங்கள். தேர்வாணையம் நம்மைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக நாம் செய்யாதவற்றையெல்லாம் செய்ததாகப் படிவத்தில் குறிப்பிடத் தேவையில்லை. உதாரணமாக, புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள், தங்களின் முதல் பொழுதுபோக்காக புத்தகம் வாசிப்பது என்று குறிப்பிட்டால், அதைச் சார்ந்து கேள்விகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எவ்வளவோ புத்தகங்கள் உள்ளன, எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி வரலாம். குறிப்பாக, நம்மை கேள்வி கேட்பவர் அதிகம் புத்தகம் வாசிப்பவராக இருந்தால் அவ்வளவுதான். இதன்மூலம், நம்முடைய நேர்மையும் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகிவிடும்.
DAF படிவத்தைவைத்து மதிப்பெண்ணைக் குவிக்க சில வழிமுறைகள்:
பொழுதுபோக்குகளைப் பொருத்தவரை உண்மையான தகவல்களைத் தருவது எவ்வளவு முக்கியமோ, அதேஅளவு சமூகப் பொறுப்பு மிகுந்த பொழுதுபோக்குகளை அல்லது சற்று அறிவுபூர்வமான பொழுதுபோக்கைக் குறிப்பிடுவதும் முக்கியம். சமூக பொறுப்புமிகுந்த பொழுதுபோக்குகள் எதையும் இதுவரை பின்பற்றவில்லை என்றால், இப்போதிருந்தே பின்பற்றத் தொடங்குங்கள். (சமூகப் பிரச்னைகளுக்காக ஃபேஸ்புக்கில் மீம்ஸ் போடுவது போன்றவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக்கொள்ள முடியாது). கிரிக்கெட், சினிமா என நமது வழக்கமான பொழுதுபோக்கைக் குறிப்பிடுவதாக இருந்தால், அவற்றைப் பற்றி முழுமையாக (வரலாறு உட்பட)த் தெரிந்து கொண்டு, உங்கள் தனித்துவத்தை சினிமா மற்றும் கிரிக்கெட் சார்ந்த கேள்விகள் வந்தால் காட்ட முடியுமா என சிந்தித்த பின் குறிப்பிடுங்கள். உங்கள் பெயரின் அர்த்தம் தொடங்கி, ஊர், கல்லூரி, மாநிலம்,பெற்றோரின் வேலை, உங்களின் முன் அனுபவங்கள் என நீங்கள் குறிப்பிட்ட அனைத்து தகவல்களைப் பற்றிய முழு விவரங்களையும் திரட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
‘நீங்கள் படித்தது மருத்துவம்/ பொறியியல். ஆனால், இப்போது இந்த வேலைக்கு வருகிறீர்கள். உங்களால் ஒரு சீட் வீணாகிவிட்டது’, ‘ஒரு மாணவனின் எதிர்காலத்தைத் தட்டிப்பறித்திருக்கிறீர்கள்!’, ‘இருக்கும் வேலையை விட்டுவிட்டு இந்த வேலைக்கு வருகிறீர்கள்?’, ‘ இந்த வேலையையும் விட்டு வேறெங்காவது போக மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?’, ‘ படித்து முடித்துவிட்டு வேலைக்குப் போகாமல், இந்தத் தேர்வுக்கு உட்கார்ந்து படித்திருக்கிறீர்கள். இது உங்களுக்கு சோம்பேறித்தனமாக தெரியவில்லையா?’ என்பன போன்ற கேள்விகள் வரக்கூடும். அதனால், உங்கள் படிப்பு மற்றும் மற்ற வேலைகள் / அனுபவம் சார்ந்தவற்றைத் தெளிவான விடைகளாகத் தயார் செய்துகொள்ளுங்கள்.
நேர்முகத் தேர்வுக்காகவே பிரத்யேகமாகக் குறிப்பேடு ஒன்றை வாங்கி அதில், ‘ இதுவெல்லாம் கேட்கப்படலாம்’ என்று நீங்கள் நினைக்கும் கேள்விகள் தொடங்கி இணையத்தில் நாம் பார்க்கும் மற்றவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் வரை அனைத்தையும் நம் குறிப்பேட்டில் எழுதிவைத்து, சிந்தித்து அதற்குச் சரியான பதில் என நாம் நினைக்கும் பதில்களையும் அதனுடன் சேர்த்து எழுதிவைத்து, அன்றாடம் ஒரு பார்வை பார்த்து வந்தால் நிச்சயம் உபயோகமாக இருக்கும். ‘எதற்காக போட்டித்திறன் தேர்வுகளை எழுதுகிறார்கள்?’ , ‘ நீங்கள் ஒரு IAS அதிகாரி ஆகி என்ன செய்யப்போகிறீர்கள்?’, ‘ஏன் இந்த விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?’ என காலம்காலமாகக் கேட்கப்படும் கேள்விகள் முதல் நீங்கள் எதிர்பார்க்கும் கேள்விகள் வரை எல்லாவற்றுக்கும் விடை தேடுங்கள். எழுதியும் வைத்துக்கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து செய்துவந்தால், நாளுக்குநாள் தன்னம்பிக்கை கூடும்.
‘ அடிப்படையில் நீங்கள் ஒரு மருத்துவர், நாளை கலெக்டராக உள்ள மாவட்டத்தில் முதலமைச்சர் ஒரு விழாவுக்காக வருகிறார், அவருடன் கான்வாயில் நீங்கள் சென்றுகொண்டிருக்கும்போது, சாலையின் அருகே விபத்தைக் காண்கிறீர்கள். உடனடியாக என்ன செய்வீர்கள் ?’ – இது ஒரு உதாரண கேள்விதான். இதுபோல தினமும் 5 சூழல்களைச் சிந்தித்து, ‘ அந்நேரத்தில் நீங்கள் எப்படி முடிவெடுப்பீர்கள்?’ என உங்களை நீங்களே நேர்மையாகச் சோதித்துப்பாருங்கள், உங்கள் தன்னம்பிக்கையின் அளவு கூடும்.
இதுதவிர, வழக்கம்போல அன்றாட நிகழ்வுகளைத் தனியாகக் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் தேர்வுநாளை ஒட்டிய நாள்களில் வரும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். ஒவ்வொரு செய்தியையும் பற்றி உங்களுடைய கருத்துக்களையும் பதிவுசெய்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனதை நீங்கள் சோதித்துப்பார்க்கும் அளவுக்கு ஆழமாகவும் நேர்மையாகவும் யாராலும் சோதிக்க முடியாது. அதிகப்படியான மாதிரி நேர்முகத் தேர்வுக ( mock interview)களுக்குப் போவதைத் தவிர்த்துவிடுங்கள். ஒன்று அல்லது இரண்டு மாதிரிகள் வரையில் பரவாயில்லை. தினமும் ஒரு மாதிரியில் பங்கேற்று, அங்கு ஒவ்வொருவரும் விதவிதமாகத் தரும் அறிவுரைகளைக் கேட்டு, உங்களை நீங்களே தொலைத்துவிடாதீர்கள். நம்பிக்கை தரக்கூடிய ஒரு சில முக்கிய அறிவுரைகளைக் கேட்டால் மட்டுமே போதும். நம் தேர்வை நாம்தான் சந்திக்கப்போகிறோம், அறிவுரை கூறுபவர்கள் அல்ல.
நேர்காணலுக்கு இந்தச் சட்டை தான் போடணும், அந்த புடவைதான் கட்டணும், இடது கையை 4 இஞ்ச் மடக்கியும் வலது கையை 5 இஞ்ச் மடக்கியும் உட்கார வேண்டும். கேள்வி கேட்கப்பட்டவுடன் கண்ணாடி அணிந்திருந்தால், அதைக் கழற்றி 5 நிமிடம் யோசித்த பிறகு பதில் சொல்ல வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் மதிப்பெண் என்று ஒரு குரூப் சொல்லும். மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை குடித்துவிட்டு பதில் சொன்னால்தான் மதிப்பெண் என்று மற்றொரு குரூப் அறிவுரைகளைக் கூறிக்கொண்டிருக்கும். இதற்கெல்லாம் அதிக முக்கியத்துவம் தராமல், நமக்கென்று உள்ள அடிப்படை குணத்துடன் நேர்மையான பதில்களைச் சொன்னாலே போதுமானது.
ஒருசில கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை என்றால், ‘ தெரியவில்லை’ என்று தைரியமாகச் சொல்லுங்கள். நானும் பலமுறை சொல்லியிருக்கிறேன். பிறர் மனதைப் புண்படுத்தாத, நேர்மையான, நடுநிலையான கருத்துகளை உற்சாகமாக உரக்கச் சொல்லுங்கள். அப்படி நீங்கள் கூறும் பதில்களே சரியான பதில்கள். நேர்காணல் நாள் உங்கள் வாழ்வின் மறக்க முடியாத நாள். அதை மகிழ்ச்சியான மனநிலையுடன் எதிர்கொள்ளுங்கள். நாளைய ஆட்சியாளர்களான நீங்கள், பொதுவெளியில் சந்திக்கப்போகும் இக்கட்டுகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதை சோதிக்கவே, இந்த நேர்முகத் தேர்வு என்பதைப் புரிந்துகொண்டால், வெற்றி உங்களுக்குத்தான்!
—-
நன்றி டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்
நன்றி விகடன்