இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

June 23, 2017

வனவியல் துறை – இயற்கை விரும்பியா நீங்கள்? வன வளத்தில் ஆர்வம் உண்டா உங்களுக்கு?

இயற்கை வளங்களில் முக்கியமானவை காடுகள். பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமின்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. பருவ மழை பெய்வதற்கும் நிலப்பரப்பின் தட்பவெப்ப நிலையைச் சீராக்கவும் வன வளம் அவசியம்.

ஒரு நாட்டின் சமச்சீரான சூழலுக்குக் காடுகளின் அளவு மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து. ஆனால், நமது நாட்டின் மொத்தப் பரப்பில் 22 சதவிகிதம் காடுகளே உள்ளன. அதிலும், தமிழகத்தில் 17.5 சதவிகிதம் மட்டுமே காடுகள் உள்ளன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காடுகள் அழிக்கப்படுவது குறித்து, சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர் கள் கவலை தெரிவித்து வருகிறார்கள். காடுகளைப் பாதுகாக்க வும், வன வளத்தைப் பெருக்கவும் வனத்துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வனத்துறையின் மேம்பாட்டுக்காகவும், வனத்துறை ஆய்வுப் பணிகளுக்காகவும் வனவியல் படித்த திறமையாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

வனவியல் சம்பந்தமாகவும் தனிப் படிப்புகள் உண்டா? அப்படியானால், அவற்றை எங்கு படிக்கலாம்?

உண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரை, கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தில் வனவியல் படிப்புக்காக வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இக்கல்லூரியில் பி.எஸ்ஸி வனவியல் படிப்பைப் படிக்கலாம். நான்கு ஆண்டுப் படிப்பு இது. ப்ளஸ் டூ படித்த மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம். வேதியியல், இயற்பியல், உயிரியல் (அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல்) பாடப் பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும். காடு களில் பணி புரிய வேண்டி யிருப்பதால், இப்படிப்பில் சேருவதற்கு உடல் தகுதியும் நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கை மூலம் இப் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். செமஸ்டருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இங்கு வனவியல் துறையில் எம்.எஸ்ஸி படிப்பையும், பி.ஹெச்டி., ஆய்வை மேற்கொள்ளவும் வசதிகள் உள்ளன. பொதுவாக, அக்ரிகல்ச்சுரல் இன்ஜினீயரிங்கை அடுத்து வனவியல் படிப்பில் சேருவதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

கேரளத்தில் திருச்சூரிலும், கர்நாடகத்தில் பொன்னம்பேட், சிர்சி ஆகிய இடங்களிலும் வனவியல் கல்லூரிகள் உள்ளன.

ஷில்லாங்கில் உள்ள நார்த்ஈஸ்டர்ன் ஹில் யூனிவர்சிட்டி, நைனிடாலில் உள்ள குமாவூன் யூனிவர்சிட்டி இவற்றில் வனவியலில் முதுநிலைப் படிப்புகள் உள்ளன. புதுடெல்லியில் உள்ள டாடா எனர்ஜி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் ‘என்விரான்மென்ட்டல் ஸ்டடீஸ் அண்ட் நேச்சுரல் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்’ படிக்கலாம். டேராடூனில் உள்ள ஃபாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் வுட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி படிக்கலாம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்களிலும் வனவியல் கல்லூரிகளிலும் வனவியல் சம்பந்த மான பல்வேறு படிப்புகளைப் படிக்கலாம்.

வனவியல் துறையில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி?

அவர்களில் பலர் இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் தேர்வுகளை எழுதி, அரசுப் பணிகளில் சேர்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இவர்கள் படிப்படியாக பதவி உயர்வு பெற்று பிரின்சிபல் சீஃப் கன்சர்வேட்டர், டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஃபாரஸ்ட்ஸ் போன்ற உயர் பதவிகள் வரை செல்லலாம். சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்ச கத்தில் நல்ல பொறுப்புகளை வகிக்க லாம். வைல்ட் லைஃப் டிரஸ்ட் ஆஃப் இந்தியா, வேர்ல்டு லைட் லைஃப் ஃபண்ட் உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் வேலைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியன் கவுன்சில் ஆஃப் ஃபாரஸ்ட்ரி ரிசர்ச் அண்ட் எஜுகேஷன், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்.) போன்ற ஆராய்ச்சி அமைப்புகளிலும் பணிகளில் சேரலாம்.

தனியார் நடத்தும் பெரிய தோட்டங்களிலும் வனவியல் படித்த மாணவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்கிறார்கள். காகித உற்பத்தி ஆலைகள், மர சம்பந்தமான பொருள் உற்பத்தி நிறுவனங்கள் போன்ற வனம் சார்ந்த தொழில் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. வணிகக் காடுகளை உருவாக்க நாற்றுகள் வளர்ப்பு, மூலிகைச் செடிகள் வளர்ப்பு, நறுமணப் பொருள்களைத் தரும் செடிகள் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மர வேலைகள், தேனீ வளர்ப்பு, ஒட்டு மரங்கள் உருவாக்கம், உயிரி உரம் தயாரிப்பு ஆகியவற்றிலும் வனவியல் மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதால், இப்படிப்பைப் படிக்கும் மாணவர்கள் தாமே சுயமாகத் தொழில் தொடங்கவும் முடியும்.

கர்நாடகம், கேரளத்தில் உள்ளது போல ஃபாரஸ்ட் ரேஞ்சர் பணியில் 50 சதவிகித இடங்களை பி.எஸ்ஸி., வனவியல் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் மத்தியில் உள்ளது. தரிசு நில மேம்பாட்டுத் திட்டம், சமூகக் காடு வளர்ப்புத் திட்டம் போன்ற திட்டங்களிலும் வனவியல் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தந்தால், அத்திட்டங்கள் வெற்றிகரமாக இருக்கும் என்பது வனவியல் துறைப் பேராசிரியர்களின் கருத்து.

இயற்கை விரும்பியா நீங்கள்? வன வளத்தில் ஆர்வம் உண்டா உங்களுக்கு? வனவியல் படிப்பு உங்களைப் பட்டை தீட்டிச் செழுமைப்படுத்தும்!

காடுகளைக் காப்போம், கைகொடுங்கள்!

Copyright © 2023 KalviApp. All rights reserved.