இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

June 27, 2017

‘அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேருங்கள்!’ ஆசிரியரின் குறும்படம்

பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக ஒவ்வொரு பெற்றோரும் அலையாய் அலைந்து வருகிறார்கள். டீக்கடை, ஹோட்டல் எங்கு பார்த்தாலும் அட்மிஷன் குறித்தே பேச்சு. தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு எவ்வளவு, இரண்டாம் வகுப்பு எவ்வளவு தொகை வாங்குகிறார்கள் என்பது பற்றியே விசாரித்துக்கொள்கிறார்கள். ஆனால், செலவே இல்லாமல் பிள்ளைகளுக்குக் கல்வியை அள்ளித்தரும் அரசுப் பள்ளி பற்றி பலரும் கண்டுகொள்வதில்லை என்ற வருத்தம் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றவர்களைவிட கூடுதலாகவே கவலைக் கொள்கிறார்கள். அதில் ஒருவர்தான் ஆசிரியர் அமலன் ஜெரோம். இவர் கவலைப் படுவதோடு நின்றுவிட வில்லை. ‘அரசுப் பள்ளியில் உங்கள் பிள்ளையைச் சேருங்கள்’ என்பதை வலியுறுத்தும் அழகான குறும்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

[youtube https://www.youtube.com/watch?v=dhg7_GGPEYE&w=718&h=404]

ஜெரோம், சேலம், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் ஆசிரியர். சின்ன வயதிலிருந்தே இசை மீதான ஆர்வத்தினால் ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இந்தக் குறும்படம் எடுக்கும் ஆர்வம் வந்தது எப்படி எனக் கேட்டோம்.

“தமிழ் மீது சின்ன வயதிலிருந்தே ஆர்வம். நிறைய கவிதைகள், கதைகள் எழுதுவேன். பக்தி, சமூகம் உள்ளிட்ட பலவற்றைக் குறித்த பாடல்களைக் கொண்ட ஆல்பங்களை வெளியிட்டுள்ளேன். பள்ளி ஆசிரியராக ஆன பின்பு, அடுத்த தலைமுறையினரிடம் தமிழைச் சிதையாமல் கொண்டுச் செல்ல வேண்டும் என முடிவு செய்தேன். அதற்காக சிடிகளைத் தயார்செய்ய திட்டமிட்டேன். ‘தாய் எனப்படுவது தமிழ்’ எனும் தலைப்பிலான சிடியில் தொடக்கப்பள்ளியின் மூன்று பருவங்களில் உள்ள பாடல்களை இசைத்து பாடி, காட்சிகள் கொண்டதாகவும் இடம்பெறச் செய்தேன். 40 பாடல்களைக் கொண்டது இதில் ஒவ்வொரு பாடலும் ராகம் போட்டு பாடும் விதத்தில் அமைத்துள்ளேன். கல்வி அதிகாரிகளின் உதவியோடு தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் அந்த சிடியைக் கொண்டுச் சென்றேன். இன்று, குழந்தைகள் அந்தப் பாடல்களை அழகாக பாடும்போது எனது நோக்கத்திற்கான பயணம் சரியான திசையில்தான் செல்கிறது என உணர்ந்துகொண்டேன்.

இதையெடுத்து பல குறும்படங்களையும் இயக்கியுள்ளேன். இந்தத் துறையில் என் ஆர்வத்தைப் பார்த்து கல்வி அதிகாரிகள் ‘படப்பதிவு இயக்குநராக’ இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். அதனால் என் பயணம் இன்னும் வேகம் எடுத்துள்ளது. தனியார் பள்ளியை விட பல மடங்கு சிறந்தது அரசுப் பள்ளி. இதை மக்கள் உணர்வதுதான் இல்லை. அரசுப் பள்ளி பற்றிய மனமாற்றம் பெற்றோர்களிடையே ஏற்படுவது மட்டுமே இதற்கான ஒரே தீர்வாக நான் பார்க்கிறேன். அதற்காக ஆசிரியர் நண்பர்களோடு இணைந்து எடுத்த முயற்சிதான் ‘அரசுப் பள்ளி நம் போதி மரம்’ குறும்படம்.

இந்தக் குறும்படம் எடுப்பதற்கான ஐடியா உருவானபோது, மாணவர் சேர்க்கை நாள் மிக அருகில் வந்துவிட்டது. அதனால் நண்பர்களிடம் பேசி இரண்டே நாட்களில் இந்தக் குறும்படத்தை எடுத்துவிட்டோம்.” என்கிறார் ஜெரோம்.

‘அரசுப் பள்ளி நம் போது மரம்’ எனும் இந்தக் குறும்படத்தில் தனியார் பள்ளியில் தன் மகனைச் சேர்க்க முயற்சிக்கும் ஒருவர் அரசுப் பள்ளியின் சிறப்புகளை உணர்ந்து தன் முடிவை மாற்றிக்கொள்வதாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது. பிரசாரப் படம் போல இல்லாமல், இயல்பான படம் ஒன்றைப் பார்க்கும் உணர்வைத் தருகிறது இந்தக் குறும்படம். அரசுப் பள்ளியில் சமீபமாக நடந்தேறியிருக்கும் அதிரடி மாற்றங்களை நமக்கு உணர்த்துகிறது. சுந்தர் ஒளிப்பதிவு செய்ய, ஆசிரியர்கள் கருணாநிதி, சாமுவேல் எபிநேசர், கலை முருகன் ஆகியோர் நடித்திருக்க, அமலன் ஜெரோம் இயக்கியிருக்கிறார்.

“அரசுப் பள்ளியில் இல்லாத வசதியே இல்லை. கணினி மூலம் பாடம் நடத்தும் முறை, மாணவர்களின் ஆர்வத்தையும் திறமையையும் ஆசிரியர் தெரிந்துகொண்டு அதில் மாணவரை வளர்த்தெடுத்தல் என்பதெல்லாம் அரசுப் பள்ளிகள் சிறப்பாக நடக்கிறது. பிள்ளைகளுக்கு பாடங்களைப் புகுத்தாமல், சுதந்திரமாக அவர்களின் இயல்புகளைப் புரிந்து அதற்கேற்றவாறு கல்வி அளித்தல் முறை அரசுப் பள்ளியில் மட்டுமே சாத்தியம். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் பலர் இன்று, வெளிநாட்டுக்குச் சென்று தனது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். கல்வித் துறையும் மென்மேலும் புதிய திட்டங்களை அளித்து பள்ளிகளுக்கு புத்துயிர் தருகிறது. இந்தச் செய்திகளை எல்லோருக்கும் கொண்டுச் சென்று சேர்க்கவே இந்தக் குறும்படம். அந்தப் பணியை அது நிச்சயம் செய்யும்” என்று நம்பிக்கையுடன் முடித்தார் ஆசிரியர் ஜெரோம்.

Copyright © 2023 KalviApp. All rights reserved.