இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

July 03, 2018

புத்த, ஜைன நூல்கள் முதல் பல்லவ கட்டடக்கலை வரை..! எதிலிருந்தெல்லாம் கேள்விகள் வரும்..? – டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை!

புத்த, ஜைன நூல்கள் முதல் பல்லவ கட்டடக்கலை வரை..! எதிலிருந்தெல்லாம் கேள்விகள் வரும்..? – டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை!
டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

#6 முதன்மைத் தேர்வுக்கான பொது பாடங்கள்
சிறப்புப் பகுதி : இந்திய வரலாறு – இலக்கியம் , கலை மற்றும் கலாசாரம்

இந்திய வரலாற்றைப் பொறுத்தவரையில் ஓரளவுக்கு கால வரிசைபடி ஒரு பார்வை பார்த்துவிட்டோம். இதில், முக்கிய பகுதியான கலை மற்றும் கலாசாரத்தின்மீது சிறப்புக் கவனம் செலுத்தவே இந்தப் பகுதி. இந்தத் தலைப்பிலிருந்து மட்டும் நான்கு முதல் 10 சதவிகிதம் கேள்விகளை எதிர்பார்க்கலாம். 2017-ம் ஆண்டு UPSC தேர்வில் நான்கு கேள்விகளும் 2016-ம் ஆண்டு UPSC தேர்வில் 6 கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன.

பண்டைய கால இலக்கியங்களைப் பொறுத்தவரை இந்து மதம், புத்த மதம் மற்றும் ஜைன மதம் சார்ந்தவை என மூன்றாகப் பிரிக்கலாம். இதில் வேதங்கள், பிராமணாஸ், ஆரண்யகாஸ் (Aranyakas ), உபநிடதங்கள், வேதங்கள், ஸ்மிரித்தி, புராணங்கள் உள்ளிட்டவை அடங்கும். அதேபோல், முக்கியமான புத்த, ஜைன நூல்கள், உள்நாட்டு வரலாறு, அரசியல் மற்றும் கலாசார நூல்கள், வெளிநாட்டுப் பயணிகள் / தூதர்கள் எழுதிய நூல்கள் ஆகியவற்றைப் பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

புத்த மதம் மற்றும் ஜைன மதங்களின் தோற்றம், வளர்ச்சி, கொள்கைகள் ஆகியவை பலமுறை கேட்கப்பட்ட கேள்விகளைக்கொண்ட தலைப்புகள்.

உதாரண கேள்வி:

# ஜைன தத்துவத்தின்படி உலகை நிலைநாட்டுவது

உலகளாவிய உண்மை

உலகளாவிய நம்பிக்கை

உலகளாவிய ஆன்மா

உலகளாவிய சட்டம் ( பதில் )

முக்கிய பாறை பிரகடனங்கள் ( Major and Minor rock edicts ), தூண் பிரகடனங்கள், ஸ்தூபிகள், கோவில்கள், மாளிகைகள் ஆகியவை எப்போது உருவாக்கப்பட்டன. அதன் பெயர், யாரால் உருவாக்கப்பட்டது. அதன் சிறப்பம்சங்கள் ஆகியவற்றை அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இவை மிகமிக முக்கியமான தலைப்புகள். காந்தாரக் கலை, மதுரா கலை வகைகள்- அவற்றில் உள்ள வேறுபாடுகள், அமராவதி கலை வகை ஆகியவற்றையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தலைப்புகள் எல்லாம் நிச்சயம் UPSC மற்றும் TNPSC மெயின் தேர்வுகளில் கைகொடுக்கும்.

சங்க காலம் பற்றிய இலக்கியக் குறிப்புகள், தொல்பொருள் சார்ந்த குறிப்புகள், சோழ, சேர, பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களின் சாம்ராஜ்ஜியங்களை பற்றிய ஆட்சி முறை, சமூக-பொருளாதார அம்சங்கள், இலக்கியம், கலை என்ற தலைப்புகளில் நீங்கள் எடுக்கும் குறிப்புகள் TNPSC தேர்வுக்கு பெரிய அளவில் உதவும்.

உதாரண கேள்வி:

#இவற்றில் எது நடு சங்க காலத்தில் இயற்றப்பட்டது ? (TNPSC 2001 group 1)

திருக்குறள்

அகநானூறு

புறநானூறு

தொல்காப்பியம் ( பதில்)

# 22 வது ஜைன தீர்த்தங்கரர் யார்? ( TNPSC group 1 2017 )

ரிஷபர்

பத்ரபாகு

பர்சவா

நெமிநாதர் (பதில்)

கோவில் கட்டடக் கலைகளில் முக்கியமான மூன்று வகைகள் 1. நகரா (nagara) 2. திராவிடம் (Dravidian) 3. வெசரா(Vesara) அல்லது சாளுக்கிய/ கர்நாடக வகையைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். பல்லவ கலை (மகேந்திர, மாமல்ல, ராஜசிம்ம, அபராஜித வகைகள்), சாளுக்கிய கலை வகைகள், ஹொய்சால (Hoysala), சந்தேலா (Chandela), விஜயநகர (Vijayanagara), சோலங்கி (Solanki), ராஷ்ட்ரகுடா ( Rashtrakuda), இந்தோ- இஸ்லாமிய கலைகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அவற்றைத் தோற்றுவித்த மன்னர்களைப் பற்றியும் விரிவான குறிப்புகளை எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

அடுத்ததாக ஓவியங்கள். பாரம்பர்ய ஓவியங்களில் முக்கியமானவை மதுபானி (பீகார்), பட்டசித்ரா (ஒடிசா), பித்தோரா (குஜராத் மற்றும் மத்திய பிரதேசம்), நிர்மல் (ஆந்திர பிரதேசம்), வார்லி (மஹாராஷ்ட்ரா), பாட் (ராஜஸ்தான்). அதேபோல், குகை சார்ந்த ஓவியங்களில் முக்கியமானவையான அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் ஆகியவை. இவற்றின் சிறப்பம்சங்கள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள் ஆகியவற்றைக் காலவரிசைபடி தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

உதாரண கேள்வி 1 ( UPSC 2017)

# போதிசத்துவ பத்மபனி இவற்றில் எங்கு மிகவும் பிரசித்திபெற்ற ஓவியமாகும்?

அஜந்தா (பதில்)

பதாமி

பாக்

எல்லோரா

உதாரண கேள்வி 2 ( UPSC 2013 )

#கல்வெட்டு கட்டடக் கலையைப் பொருத்த வரை

1. பதாமி குகைகள் இவற்றில் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்தவை

2. பராபர் குகை கல்வெட்டுக்களை அஜீவிகர்களுக்காகச் சந்திரகுப்த மௌரியர் செய்தார்

3. எல்லோராவில் உள்ள குகை கல்வெட்டுகள் எல்லா நம்பிக்கைகளுக்கானவை ( faiths )

இவற்றில்

Only 1 correct

2 and 3 correct

Only 3 correct ( பதில்)

All are correct

முக்கிய நடன வகைகள் 1. பாரம்பர்யம் – பரதநாட்டியம் (தமிழ்நாடு), குச்சிப்புடி (ஆந்திரப் பிரதேசம்), கதகளி (கேரளா), ஒடிசி (ஒடிசா), மணிப்பூரி (மணிபூர்), கதக் (உத்தரப்பிரதேசம்), சத்ரியா (அஸ்ஸாம்), மோகினியாட்டம் (கேரளா). 2. நாட்டுப்புற நடன வகைகளான கௌர், முரியா, சைலா, கர்மா, கக்சார் (மத்திய இந்தியா), கூமார், தமால், ஹிகாட், ஹூர்கா பாவ்ல், சோலியா, பாங்ரா (வட இந்தியா), பிகு, ஷஜ்கிரி, நான்கிறேம் (வடகிழக்கு இந்தியா), கல்பெலியா, தாண்டியா, தேரா தல்லி (மேற்கு இந்தியா), கும்மி, கோலாட்டம் போன்ற தென்னிந்திய நடன வகைகள் ஆகியவற்றைப் பற்றி இடங்களோடு சேர்த்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதவிர, நாடக கலைகள், முக்கிய விழாக்கள் ( இடம் மற்றும் மத வாரியாக), இசை வகைகள் (பாரம்பரிய கர்னாடிக், ஹிந்துஸ்தானி உள்ளிட்ட மற்றும் நாட்டுப்புற வகைகள்) ஆகியவற்றைப் பற்றி படித்துவிடுங்கள். கலை மற்றும் கலாசாரம் சார்ந்த முக்கிய அரசு சார்ந்த அமைப்புகள், சங்கங்கள் ஆகியவற்றிலிருந்தும் பல கேள்விகள் வந்துள்ளன.

பார்ப்பதற்கு நிறைய இருந்தாலும் இந்தப் பகுதி ரொம்ப முக்கியம் நண்பர்களே! UPSC, TNPSC முதல் நிலை மற்றும் மெயின் தேர்வுகள் என இந்தப் பகுதியிலிருந்து வரும் கேள்விகள் ஏராளம். அதனால் மேலே கூறிய தலைப்புகளில் முழுமையாகக் குறிப்பெடுத்து படியுங்கள். எந்த போட்டித்தேர்வாக இருந்தாலும் சொல்லி அடிக்கலாம்!

— நன்றி விகடன்

Copyright © 2023 KalviApp. All rights reserved.