இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

July 04, 2018

அரசுத் திட்டங்கள் முதல் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வரை… இந்த 10 தலைப்புகளே தேர்வுக்கு உதவும்! டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

அரசுத் திட்டங்கள் முதல் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வரை… இந்த 10 தலைப்புகளே தேர்வுக்கு உதவும்! டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை
டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

#15 முதன்மைத் தேர்வுக்கான பொதுப் பாடங்கள்- அன்றாட நிகழ்வுகள்(Current Affairs)
ஒரு பக்கக் குறிப்புகளின் ரகசியம்!

’ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படிக்கிறியா…நிறைய நியூஸ் பேப்பர் படிப்பா!’ – பெரும்பாலோனோர் நமக்கு கூறும் அறிவுரை இதுதான். அன்றாட நிகழ்வுகளாக செய்தித்தாள்களில் வரும் செய்திகள் சார்ந்த கேள்விகள் அனைத்தும் போட்டித்தேர்வுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதைக் கட்டாயம் படிக்க வேண்டும் என அனைவருக்கும் தெரியும், ஆனால் எப்படிப் படிக்க வேண்டும் என பலருக்கும் தெரிவதில்லை.

40 பக்க செய்தித்தாளில் தேசிய, சர்வதேச நிகழ்வுகள், அரசியல், சினிமா, விளையாட்டு, விளம்பரம், ராசிபலன் என ஏகப்பட்ட தகவல்கள் தினமும் வந்து குவிகின்றன. இதில், தேவையுள்ளள ஆணி எது? தேவையில்லாத ஆணி எது என்று தெரிந்து கொள்வதில்தான் நமது வெற்றியே அடங்கியுள்ளது. செய்தித்தாள்களில் தவறவிடக் கூடாது பத்து முக்கிய தலைப்புகளைப் பார்ப்போம்.

1. பட்ஜெட் மற்றும் எகனாமிக் சர்வே ( economic survey)
2. உலக மற்றும் தேசிய அளவில் முக்கியமான மாநாடுகள் / கூட்டங்கள் ( G20 , WEF , BRICS , UN மாநாடுகள் போன்றவை)
3. முக்கிய விருதுகள் / பரிசுகள் ( நோபல் பரிசு, புக்கர் பரிசு, பாரத் ரத்னா போன்றவை)
4. உலக / தேசிய அளவில் ஏற்படும் அரசியல் / பொருளாதார மாற்றங்கள் ( Brexit, demonetisation etc )
5. மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் – மிக முக்கியம் ( போட்டித்தேர்வுகளின் எல்லா நிலைகளிலும் எல்லா தாள்களிலும் கைகொடுக்கும் )
6. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், தற்போது ட்ரெண்ட்டிங்கில் இருக்கும் தொழில்நுட்பங்கள் ( IoT, Cloud போன்றவை )
7. அரசியல் சாசனத்தைச் சார்ந்த, குறியிடும் நிகழ்வுகள், முக்கியத் தீர்ப்புகள் (உதாரணமாக, நதி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை என்றால் அது தொடர்பாக நம் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை )
8. முக்கிய பேரிடர்கள் – தேசிய மற்றும் உலக அளவில் ஏற்படுபவை ( புயல், சுனாமி, தீவிரவாதச் செயல்கள் உள்ளிட்டவை)
9. முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் – போட்டிகள், சாதனைகள், சாதனையாளர்கள்
10. இந்தியாவின் வெளியுறவு – முக்கிய ஒப்பந்தங்கள், நிகழ்வுகள் போன்றவை

இந்த 10 தலைப்புகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு செய்தித்தாள்களைப் படிக்கத் துவங்குங்கள். ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தாலும், படிக்கப் படிக்க தேர்வுக்குத் தேவையான செய்தி எது? தேவை இல்லாத செய்தி எது என்று நம்மால் எளிதில் புரிந்தது கொள்ளமுடியும். அதேபோல், செய்தித்தாள்களிலும் இணையதளத்திலும் பார்க்கும் தகவல்களை குறிப்பெடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். அப்படி குறிப்புகள் எடுக்கும்போது இரண்டு விஷயங்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்

1. நேரம் – ‘current affairs படிக்கறேன்’ என்ற பெயரில் நாள் முழுக்க செய்தித்தாள்களை வைத்துக்கொண்டும் டி.வியில் செய்திகளைப் பார்க்கிறேன் என்று மணிக்கணக்கில் உட்கார்வதும் பலன் தராது. தினமும் காலையில் ஒருமணி நேரத்துக்குள் செய்தித்தாள்களை படித்த முடித்து குறிப்புகளையும் எடுத்து முடிப்பது நல்லது. ஆரம்பத்தில் அதிக நேரத்தை எடுத்தாலும் நாளடைவில் பழகிவிடும் ! (வேறு வழியில்லை)
2. குறிப்புகளின் அளவு – 40 பக்க செய்தித்தாளினை அப்படியே காப்பி அடித்துவிட்டு, அதைக் குறிப்பு என்று சொல்ல முடியாது. 40 பக்க செய்தித்தாளினை ஒரு பக்கத்துக்குள் கொண்டு வருவதுதான் நல்ல குறிப்பின் அடையாளம். இதிலும் வல்லமை பெற சற்று பயிற்சி தேவை. தொடர் முயற்சி மற்றும் பயிற்சி இருந்தால் நினைத்தவாறு, ஒருபக்க குறிப்புகளைத் தயாரித்துவிடலாம்.

இப்போது உங்கள் மனதில், குறிப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வி எழும். அதைப் பற்றியே பார்க்கலாம். நாம் முதன்மைத் தேர்வுகளுக்கு எடுக்கும் ஒரு பக்கக் குறிப்புகளை மெயின் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் வரையில் நாம் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதற்கென்று தனியான நடப்பு நிகழ்வுகள் தேவையில்லை.

உதாரணமாக, அண்மையில் உலக பொருளாதார மன்றத்தின் ( world economic forum) உச்சிநிலை மாநாடு ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் ( Davos) நகரில் நடந்தது.

இதில் இருந்து, உலக பொருளாதார மன்றம் எப்போது, யாரால் தொற்றுவிக்கப்பட்டது? அதன் தற்போதைய தலைவர் யார், அதன் தலைமை அலுவலகம் எங்கு உள்ளது, தற்பொது எத்தனையாவது மாநாடு நடக்கிறது, அடுத்து எங்கு நடக்க உள்ளது என்பன போன்ற கேள்விகள் முதன்மைத் தேர்வுகளில் கேட்கப்படலாம். அதே மாநாட்டில், ஸ்மார்ட் டேட்டாவை ( smart data) வைத்து மலேரியா ஒழிப்பைத் தீவிரப்படுத்த முடியும் என்று கலந்தாலோசிக்கப்பட்டது. அதைப்பற்றி 100 வார்த்தைகளில் குறிப்பு வரைக எனக் கேள்வி கேட்கப்படலாம். டாவோஸ் மாநாட்டில் கலந்தாலோசிக்கப்பட்ட முக்கிய தலைப்புகள் என்னென்ன, அவைகளில் இந்தியாவின் நிலைபாடு என்ன.. என்பன போன்ற கேள்விகள் நேர்முகத்தேர்வில் கேட்கப்படலாம். ஆக, டாவோஸ் மாநாடு என்ற தலைப்பு ஒன்றுதான். ஆனால் போட்டித் தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமாகக் கேள்விகள் அமையும்.

இதை எல்லாம் ஒரு பக்க குறிப்புக்குள் கொண்டு வருவதுதான் நம் திறமை. அப்படிக் கொண்டு வர பழகிவிட்டோம் என்றால், தேர்வுகளுக்கு முன் திருப்புதல் (Revision) செய்வதற்கு மிகமிக எளிதாகிவிடும். நன்றாக நம் மனதிலும் தகவல்கள் பதிந்து விடும். இன்றைய குறிப்புகள் நாளைய பொக்கிஷங்கள்!

— நன்றி விகடன்

Copyright © 2023 KalviApp. All rights reserved.