இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

July 04, 2018

ஜனாதிபதியின் 6 அதிகாரங்களைப் படித்திருக்கிறீர்களா? டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

ஜனாதிபதியின் 6 அதிகாரங்களைப் படித்திருக்கிறீர்களா? டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை
– டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

முதன்மைத் தேர்வுக்கான பொதுப் பாடங்கள்: இந்திய அரசியல் (Indian Polity)

இந்திய அரசியல் சாசனம் ( Indian constitution) பகுதி-4

இந்திய அரசியலின் இந்தப் பகுதியில் நாம் பார்க்க இருக்கும் முதல் தலைப்பு பார்லிமென்டரி முறை எனப்படும் மக்களாட்சியைப் பற்றி. இதன் பிறப்பிடம் இங்கிலாந்து என்றாலும் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆட்சி முறையே பின்பற்றப்படுகிறது. ஷரத் 74 (பிரதமர் தலைமையிலான மந்திரி சபை) மற்றும் 75வது ஷரத், மத்தியில் மக்களாட்சியைப் பற்றியும் ஷரத் 163 மற்றும் 164 மாநிலங்களின் மக்களாட்சியை பற்றியும் குறிப்பிடுகின்றன. நம் அரசியல் சாசனத்தின் ஐந்தாம் பாகத்தில் ஷரத் 52 முதல் 78 வரை மத்திய அரசாங்கத்தைக் (Executive) குறிக்கிறது. அரசின் தலைவர் ஜனாதிபதி ஆவார். அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பெயரிலேயே எடுக்கப்படுகின்றன ( De Jure தலைவர்). உண்மையான அத்தனை அதிகாரங்களையும் பிரதமர் ( De Facto தலைவர் ) தலைமையிலான அமைச்சரவையே கொண்டுள்ளது. ஷரத் 52 ன்படிதான் ஜனாதிபதியின் பதவி உள்ளது. மறைமுகத் தேர்தலின் மூலம் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார் (proportional representation by a single transferable vote). ஷரத் 54, 55 மற்றும் 71 ஆகியவை ஜனாதிபதி தேர்தலைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஜனாதிபதியை பற்றிய சில முக்கியக் குறிப்புகளைப் பார்ப்போம்.

1. ஷரத் 56(1)படி ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 ஆண்டுகள். ஜனாதிபதி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை துணை ஜனாதிபதியிடம் கொடுக்க வேண்டும்.
2. ஷரத் 57 ன்படி ஜனாதிபதி மறு தேர்வு செய்யப்படலாம். எத்தனை முறை வேண்டுமானாலும்.
3. ஷரத் 58 ஜனாதிபதி ஆவதற்கான தகுதிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அ) இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் ஆ) 35 வயதைக் கடந்தவராக இருக்க வேண்டும் இ) நாடாளுமன்றத்தின் மக்களவையின் உறுப்பினருக்குரிய அனைத்துத் தகுதிகளும் இருக்க வேண்டும்.
4. மத்திய, மாநில அரசுகளில் எந்த ஒரு முக்கிய பதவியும் வகிக்கக் கூடாது.
5. ஜனாதிபதியின் பதவிப்பிரமாணத்தை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி செய்து வைப்பார்.
6. ஷரத் 61 முலம் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யலாம் ( impeachment). அதற்கு நம் அரசியல் சாசனத்தின் விதிமீறலை மட்டுமே காரணமாகக் காட்ட முடியும் ( constitutional violation). அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் பதவி நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள். அதேபோல், ஜனாதிபதி, பிரதமர் உட்பட யாரையெல்லாம் பணி நியமனம் செய்கிறார் என்று ஒரு பட்டியல் உண்டு, அதை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
7. ஜனாதிபதிக்கு உள்ள சட்டமன்றம் சார்ந்த( legislative) அதிகாரங்கள், நீதிமன்றம் சார்ந்த ( Judicial) அதிகாரங்கள், செயல் சார்ந்த( Executive ) அதிகாரங்கள், அவசர நிலை (emergency) அதிகாரங்கள், ராணுவ (military) அதிகாரங்கள், தூதரக ( Diplomatic) அதிகாரங்கள் ஆகியவை மிக முக்கியம். அவை ஒவ்வொன்றைப் பற்றியும் ஷரத்துகள் வாரியாகப் படித்துவிடுங்கள்.

உதாரண கேள்வி:

இவற்றில் எது சரி?
1. ஷரத் 143 ன்படி ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்திடம் இருந்து ஆலோசனைகள் பெற முடியும்
2. ஷரத் 360 ன்படி பொருளாதார ரீதியான அவசர சட்டத்தை ( Financial emergency) ஜனாதிபதி பிறப்பிக்க முடியும்
3. ஷரத் 63 ன்படி துணை ஜனாதிபதியின் பதவி உள்ளது. ஷரத் 64 ன்படி துணை ஜனாதிபதி, மாநிலங்களவையின் (Council of states) தலைவர் ( ex officio chairman )

1 only
2,3 only
All are wrong
All are correct ( பதில் )

ஜனாதிபதியை பற்றிய முக்கியக் குறிப்புகளைப்போல், பிரதமரைப் பற்றியும் முக்கியக் குறிப்புகளை, ஷரத்துகளை (உதாரணம் ஆர்டிகல் 74 ) உட்பட எடுத்துக்கொள்ளுங்கள். நாடாளுமன்றம் மற்றும் அதன் நடைமுறைகளை ஷரத் 79 முதல் 123 (பகுதி ஐந்து ) வரை தெரிந்து கொள்ளலாம். நாடாளுமன்றத்தின் இரு அவைகள், அதன் உறுப்பினர்கள், அவர்களின் எண்ணிக்கைகள், அவர்களுக்கான தகுதிகள் ஆகியவை மிக முக்கியம்.

உதாரண கேள்வி:

நம் அரசியல் சாசனத்தின்படி
ராஜ்ய சபா உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 250
லோக் சபா உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 552

இவற்றில் எது சரி

1,2 ( பதில்)
1 only
2 only
Neither 1 nor 2

ஷரத் 93 ன்படி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவ்விரு பதவிகளைப் பற்றிய முக்கியக் குறிப்பினையும் எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக, நாடாளுமன்றத்தில் நிகழும் முக்கியச் செயல்முறைகளையும் செயல்முறைகளைக் குறிக்கும் வார்த்தைகளுக்கான அர்த்தங்களையும் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், அவை மிக முக்கியம் ( உதாரணமாக summoning, prorogation, adjournment, quorum, zero hour, question hour, cut motion, adjournment motion போன்றவை )

இதில் பெரும்பாலானவை நம் பள்ளியில் குடிமையியல் (civics) என்னும் பாடத்தில் நாம் படித்தவைதான். இன்னும் கொஞ்சம் அதிக தகவல்களோடு சேர்த்துப் படிக்கின்றோம், அவ்வளவுதான்.

— நன்றி விகடன்

Copyright © 2023 KalviApp. All rights reserved.