இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

July 04, 2018

இந்த 12 அடிப்படை உரிமைகளை விரல்நுனியில் வைத்திருங்கள்! – டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

இந்த 12 அடிப்படை உரிமைகளை விரல்நுனியில் வைத்திருங்கள்! – டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!
டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

Day 12 : எல்லாருக்கும் – எல்லா உரிமைகளும்!
இந்திய அரசமைப்பு சட்டத்தின் மிக இன்றியமையாத பகுதி – பிரிவு 12 முதல் 35 வரையிலான, பாகம் III. ‘அடிப்படை உரிமைகள்’ (FUNDAMENTAL RIGHTS).

Supreme court

அது என்ன ’அடிப்படை’ (fundamental) உரிமைகள்?

ஒருவர் மானத்துடன் உயிர் வாழ என்னென்ன தேவையோ, அவையெல்லாம் ‘அடிப்படை’ உரிமைகள். எந்தத் தனி மனிதரோ, அமைப்போ, நிறுவனமோ, ஏன்… அரசாங்கமே கூட, இந்த உரிமைகளை மறுக்க முடியாது. இவற்றை ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதி செய்கிறது நமது சாசனம். ஆகவேதான், அரசமைப்பு சட்டத்தை, ‘உரிமைகளின் பாதுகாவலன்’ (Protector of Rights) என்கிறோம்.சரி. என்னென்ன உரிமைகளை நமது சாசனம், அடிப்படை உரிமைகளாக நமக்குத் தந்து இருக்கிறது…? முக்கியமானவற்றை மட்டும் பார்ப்போம்.

1. எல்லாருக்கும் சமமான சட்ட உரிமை. இந்த உரிமையை சட்டம், யாருக்கும் மறுக்காது. (பிரிவு / Article – 14) சட்டப்படியான எந்த உரிமையையும் யாருக்கும் யாரும் மறுக்க முடியாது.

2. யாரையும் சட்டம் பாகுபடுத்திப் பார்க்காது. சட்டத்தின் நேர் பார்வையில், எல்லாரும் ஒன்று. ஏழை, பணக்காரன், படித்தவர், படிக்காதவர், ஆண், பெண் உள்ளிட்ட எந்த வேறுபாடும் சட்டத்தின் முன் இல்லை. சாதி, மதம், இனம், மொழி போன்ற பாகுபாடுகளும் அறவே கிடையாது. (பிரிவு 15)

3. பொது வேலை (public employment) பெறுவதில் அனைவருக்கும் சம வாய்ப்பு. (பிரிவு 16)

4. தீண்டாமை ஒழிப்பு. எந்த வடிவத்தில் தீண்டாமை கடைப் பிடிக்கப் பட்டாலும், தடை செய்யப் படுகிறது; சட்டப்படி தண்டனைக்கு உரியது. (பிரிவு 17)

5. பேச்சு சுதந்திரம். பேச, ‘வெளிப்படுத்த’, ஆயுதங்கள் இன்றி அமைதியாக ஒன்று சேர, மன்றங்கள்/ அமைப்புகள் நடத்த, இந்தியாவுக்குள் எங்கும் சென்று வர, இந்தியாவுக்குள் எங்கும் வசிக்க – எல்லாக் குடிமகன்களுக்கும் உரிமை உண்டு. (பிரிவு 19) ஒரே குற்றத்துக்கு இரு முறை தண்டனை வழங்கப்பட மாட்டாது. (பிரிவு 20)

6. வாழ்வதற்கான, தனிநபர் சுதந்திரத்துக்கான உரிமை. (பிரிவு 21) ஆதார் அட்டைக்கு எதிராக, தனிநபர் உரிமை பறி போவதாகப் பேசுகிறார்கள் அல்லவா…? அவர்கள் சுட்டிக் காட்டுவது இந்தப் பிரிவைத்தான்.

7. கல்வி உரிமை. 6 முதல் 14 வயது வரை, அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வியை உறுதி செய்தல். (பிரிவு 21A) இது, 2002இல் கொண்டு வரப்பட்ட 86ஆவது திருத்தம். அடிக்கடி கேட்கப் படுகிறது.

8. முகாந்திரமற்று யாரையும் கைது செய்வதைத் தடுக்கிறது சாசனம். (பிரிவு 22) கைதான 24 மணி நேரத்துக்கு உள்ளாக, நீதிபதி முன்பாக நிறுத்தப்பட வேண்டும்.

9. குழந்தைத் தொழிலாளர்கள் கூடாது என்கிறது பிரிவு 25.

10. வழிபட, பின்பற்ற – மத சுதந்திரம் வழங்குகிறது பிரிவு 25; கல்வி நிறுவனங்கள் நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள மத அமைப்புகளுக்கு அனுமதி வழங்குகிறது பிரிவு 26.

11. மொழி, மத சிறுபான்மையினரின் நலன்கள் பிரிவு 29. சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு பிரிவு 30.

12. இந்த சாசனம் தரும் உரிமைகள் மறுக்கப்படும் பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். பிரிவு 32.

மேலே தரப்பட்டுள்ள விவரங்களை, சிரமம் பார்க்காமல், மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளவும். சர்வ நிச்சயமாக தேர்வின் போது, மிக உதவியாக இருக்கும். ஒரு தனிநபர் (individual) விருப்பப்பட்டு தானாக, தனக்கு அடிப்படை உரிமைகள் தேவை இல்லை என்று சொல்ல முடியுமா…? முடியாது, சட்டம் இதனை அனுமதிக்கவில்லை. தனி நபர் உரிமை என்று சொல்லப் பட்டாலும், இதற்கான கடப்பாடு சமுதாயத்தின் மீதே சுமத்தப் பட்டு இருக்கிறது. காரணம் தனிநபர் உரிமை என்பது, ஒட்டுமொத்த சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பை உள்ளடக்கியது.

அரசமைப்பு சட்டப் பிரிவுகளில் மிக அதிகமாக விவாதிக்கப் படுவது – – பிரிவு 19. எழுத்துச் சுதந்திரம், பத்திரிகை, ஊடகங்கள், துணிச்சலுடன் செய்திகளை வெளியிடும் உரிமை…., இப்பிரிவின் கீழ் வருகின்றன. திரைப்படங்களுக்கு எதிராகக் கண்டனங்கள், ‘தடை செய்ய வேண்டும்’; ‘வெளியிடக் கூடாது’ என்று கோரிக்கைகள் வரும் போதெல்லாம், படைப்பாளிகள் தஞ்சம் புகும் பிரிவும் இதுதான். பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் ஏதாவது ஒரு காரணத்துக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டால், இந்தப் பிரிவு வழங்கும் உரிமையைத்தான் சுட்டிக் காட்டுவார்கள்.

ஏன் இதையெல்லாம் சொல்கிறோம்…? நேரடியான கேள்வியாக இல்லாமல், மறைமுகமான ஒன்றாக, தேர்வில் வந்து விட்டால் என்ன செய்வது..? உதாரணத்துக்கு, ஓர் அமைப்பு, ஒரு பொது நலனை முன் நிறுத்தி, ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கேட்கிறது. இவ்வாறு ஊர்வலம் நடத்துவதற்கு அவருக்கு சட்டப்படி உரிமை இருக்கிறதா…? ஆம். இருக்கிறது. அரசியல் சாசனம் பிரிவு 19இன் படி, தமது கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை, உறுதி செய்யப் படுகிறது. இவ்வாறே இந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு பிரிவையும் தொடர்பு படுத்திப் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில், பல்வேறு பிரசினைகளைப் பற்றிப் பொது வெளியில் பலர் விவாதிக்கப் பார்க்கிறோம். ஜனநாயகத்தின் வலிமையே, மக்கள் தங்களது கருத்துகளை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துகிற சுதந்திரத்தில்தான் அடங்கி இருக்கிறது. ஆகவே அடிப்படை உரிமைகள், அரசுக்கு எதிரானது அல்ல; மாறாக, சுதந்திரமான சமுதாயம் மூலம் அமைத்திக்கு வழி கோலுகிற மிக சிறந்த உத்தி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். குரூப் 4 தேர்வுக்கு, இந்த அளவே போதும். ‘உரிமைகள்’ பார்த்தோம். அடுத்தது…? ‘கடமைகள்’. அதை நாளை பார்க்கலாம். TNPSC Group 4 ஜெயிக்கலாம் பகுதியின் முந்தைய பாடங்களை படிக்க விரும்பினால் இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்

— நன்றி விகடன்

Copyright © 2023 KalviApp. All rights reserved.