நேர்முகத் தேர்வுக்கு உதவும் பாசிட்டிவ் பதில்கள்!
நேர்முகத் தேர்வு! நம் முயற்சிக்கும் இலக்குக்கும் நடுவே உள்ள படிக்கட்டு. நம்மைத் தூக்கிவிடுவதும் இந்தப் படிக்கட்டுதான், தடுக்கிவிடுவதும் இந்தப் படிக்கட்டுதான்.எப்படி வேண்டுமானாலும் போகலாம் என்று நமக்கு முதலிலேயே தெரிந்து விட்டதால் எல்லாவற்றுக்கும் நம்மைத் தயார் படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம். இன்டர்வியூ என்றாலே ஏடாகூடமாகக் கேள்விகள் கேட்ப்பார்கள், ‘இப்படியிருக்கும் அப்படியிருக்கும்’ என நமக்கு நாமே ஏதாவது ஒரு கணக்கைப் போட்டு வைத்திருப்போம். சும்மா யோசிக்கும்போது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். ஆனால், லட்சக்கணக்கான மாணவர்களோடு போட்டி போட்டு, இரண்டு கடினமான நிலைகளைத் தாண்டி பல தியாகங்களுக்குப் பிறகு இலக்கின் விளிம்பில் நின்று பார்க்கும் போது சுவாரஸ்யம் என்பதெல்லாம் பறந்துபோய் ஒருவித பதற்றம் மட்டுமே நமக்குள் தொற்றிக்கொள்ளும். இந்தப் பதற்றநிலையிலிருந்து விடுபட்டு நம்மைச் சுற்றி நடக்கும் சுவாரஸ்யங்களை ரசிக்கும் மன நிலைக்குத் திரும்புவதில்தான் இருக்கிறது நாமி பெறப் போகும் முதல் வெற்றி. ‘ மனதைப் பதற்றம் இல்லாமல் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகிவிடலாமா?’ எனச் சிலர் நினைக்கலாம். மனதைச் சரியானபடி ஒருங்கிணைக்க முடியாவிட்டால், எதுவாகவும் நம்மால் ஆக முடியாது.
யு.பி.எஸ்.சி போன்ற போட்டித்தேர்வுகளில் முதன்மை மற்றும் மெயின் தேர்வுகளின் மூலம் போதுமான அளவு நம்முடைய அறிவு சோதிக்கப்படுவதால், நேர்முகத் தேர்வு என்பது நம்முடைய அணுகுமுறை, நேர்மை, மனநிலை ஆகியவற்றை சோதிக்கும் வண்ணமே அமையும். எனவே, உற்சாகமான, நேர்மையான மனநிலையே போட்டி தேர்வுகளின் வெற்றிக்கு மிக முக்கியம். அதனை வளர்த்துக் கொள்ள உதவும் சில குறிப்புகளைப் பார்ப்போம்.
தேர்வில் கேட்கப்படக்கூடிய எந்தவொரு முக்கிய நிகழ்வோ சம்பவமோ குறித்த சொந்தமான, அதேசமயம் அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். உதாரணமாக ஃபிஃபா(FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. எங்கு, எப்போது, அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற நாடுகளின் பட்டியல் என அனைத்தையும் முதன்மை தேர்வுகளுக்குத் தயாராகும் ஸ்டைலில் குறிப்பெடுத்து வைத்திருந்தாலும் நேர்முகத் தேர்வில் இதற்கு மாறான கேள்விகள் கேட்கப்படலாம். உதாரணமாக, ‘ இந்தியா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்குத் தகுதி பெற என்ன செய்ய வேண்டும்?’ ; ‘ இந்தியா எப்போது தகுதி பெறும் என நினைக்கிறீர்கள்?’ என்பன போன்ற கேள்விகள் கேட்கப்படலாம். இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது, ‘ அடுத்த உலகக் கோப்பைக்கே இந்தியா தகுதி பெற்று விடு’ என்றெல்லாம் அதீத பாஸிடிவ்வான பதிலைச் சொல்ல வேண்டிய தேவையில்லை. ‘ இந்தியா தகுதியே பெறாது, எங்கும் தவறு, எதிலும் தவறு’ என அதீத நெகடிவ்வாகவும் பதிலைச் சொல்லத் தேவையில்லை. சாதக பாதகங்களை ஆராய்ந்து நடுநிலையான பதிலைத் தருவது மிக முக்கியம். நமது குறைபாடுகளோ அல்லது தவறுகளோ நேர்முக தேர்வில் சுட்டிக்காட்டப்பட்டாலும், அதனை ஏற்கின்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்பக்கம் தான் குறைபாடு என்று தோன்றினால் நம்மை மாற்றிக்கொள்வதில் தவறில்லை. எப்போதும் நாம்தான் சரி என்பன போன்ற எண்ணத்தை விட்டுவிட்டு, மற்றவர்களின் பார்வையில் சூழல்களை அணுகினால் நேர்முகத் தேர்வுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் நிச்சயம் உதவும்.
தோல்வியைப் பற்றியோ, ‘தோற்றால் என்ன நடக்கும்?’ என்ற நினைப்பையெல்லாம் அடியோடு மறந்துவிட்டு, நேர்முகத் தேர்வு வரையில் உங்களைக் கொண்டு வந்த நேர்மறையான எண்ணங்களையும் மனிதர்களையும் மட்டும் உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். நேர்முகத் தேர்வு வரையில் உங்களைக் கொண்டு வந்த ஆற்றல், நிச்சயம் நேர்முகத் தேர்விலும் வெற்றியைத் தேடித் தரும்.
நேர்முகத் தேர்வை அணுகும் முறையையும் மனப்பாங்களையும் பார்த்தோம். இனி நேர்முக தேர்வில் எந்தவிதமான கேள்விகள் பொதுவாக கேட்கப்படுகின்றன என்பதைப் பார்க்கலாம். மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே DAF ( Detailed Application Form ) எனப்படும் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அந்தப் படிவத்தில் நம் பின்னணி, கல்வி, பிற தகுதி மற்றும் அனுபவங்கள், பொழுதுபோக்குகள், IAS, IPS உட்பட பல்வேறு பணிகளில் நமக்கு விருப்பமான பணிகளின் தரவரிசை, நமக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட நாம் விரும்பும் மாநிலங்களின்( cadres) தரவரிசைப் பட்டியல் ஆகியவற்றை நாம்தான் எழுதி தேர்வாணையத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த DAF படிவம் நமது நேர்முகத் தேர்வின்போது தேர்வாளர்களின் கைகளில்தான் இருக்கும். பெரும்பாலான நேரங்களில் குறைந்தபட்சம் 25 சதவிகிதமான கேள்விகள் நாம் கொடுத்த இந்த DAF படிவத்தில் இருந்தே அமையும். சிலருக்கு முழு நேர்முகத் தேர்வும் DAF படிவத்தைச் சார்ந்தே அமைந்திருக்கிறது, சிலருக்கு ஒருகேள்வி கூட DAF படிவத்தில் இருந்து கேட்கப்படாதபடியும் அமைந்திருக்கிறது. இப்படியும் அப்படியும் நமக்கு நேரமோ அல்லது அதிர்ஷ்டமோ இல்லாமல் இருந்தால் நிச்சயம் 25 முதல் 50 சதவிகித கேள்விகள் நம்முடைய DAF படிவத்தில் இருந்தே கேட்கப்படலாம். ஆக, நமக்கு கேட்கப்படும் கேள்வித்தாளை நாம்தான் தயார் செய்கிறோம்.
—-
நன்றி டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்
நன்றி விகடன்