வெற்றிக்குக் கைகொடுக்கும் நதிகளும் நீர்வீழ்ச்சிகளும் – டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை
டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்
#10 முதன்மைத் தேர்வுக்கான பொதுப் பாடங்கள்: (இந்தியப் புவியியல்)
இந்தியப் புவியியல் பகுதியைப் பொறுத்தவரையில், ஏற்கெனவே சொன்னது போல இந்திய வரைபடத்தை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்வது மிக அவசியம். மருத்துவப் படிப்பின் முதலாம் ஆண்டில், மனித உடற்கூறியல் பாடம் மிக முக்கியமானது. அதாவது, நம் உடலின் பாகங்களை பற்றிப் படிக்கும் பாடமாகும். இதை எழுத்தாகப் படிக்காமல் உயிரற்ற மனித உடலினை வைத்தும் மாதிரிகளை வைத்தும் படங்களை வைத்தும் பெரும்பாலான மாணவர்கள் படிப்பது வழக்கம். அதேபோல்தான், இந்தப் புவியியல் பாடத்திலும் பின்பற்ற வேண்டும். இடங்கள், மலைத்தொடர்கள், நதிகள், தட்பவெட்பம், மண், தாவரங்கள் மற்றும் விலங்கு வகைகள் என அனைத்தையும் இந்திய வரைபடத்தைப் பார்த்தே நம் மனதில் ஏற்றிக்கொண்டால் இந்தத் தலைப்புகளில் வரும் கேள்விகளை உடனே டிக் செய்யலாம்.
இந்தியாவில் உள்ள அனைத்து நதிகள், சிறப்புப் பெயர்கள், அவை தோன்றும் இடங்கள், அவற்றின் கிளைகள், நதிகள் கடந்து செல்லும் மாநிலங்கள், இடங்கள் என அனைத்தையும் வரலாற்றுப் பகுதியில் கூறியதுபோல, டேபிள் அமைத்துக் குறித்துக் கொள்வது நல்லது.
உதாரணக் கேள்வி
#1
Statement I கில்கிட் என்பது இந்தஸ் நதியின் கிளைகளில் ஒன்றாகும்
Statement II சுபன்ஶ்ரீ என்பது பிரம்மபுத்திரா நதியின் கிளைகளில் ஒன்றாகும்
Statement I is correct
Statement II is correct
Both are correct ( பதில் )
Both are wrong
#2
Statement I கிருஷ்ணா, கோதாவரி. மகாநதி, காவேரி போன்ற நதிகள் பென்னின்சுலார் இந்தியாவின் மேற்கே பாயும் நதிகள் ஆகும்
Statement II நர்மதா, தபதி,மஹி, கலிநதி ஆகிய நதிகள் பென்னின்சுலார் இந்தியாவின் கிழக்கே பாயும் நதிகள் ஆகும்.
Statement I is correct
Statement II is correct
Both are correct
Both are wrong ( பதில்) (statement I ல் கொடுக்கப்பட்டுள்ள நதிகள் கிழக்கே பாயும் நதிகள் . Statement II கொடுக்கப்பட்டுள்ள நதிகள் மேற்கே பாயும் நதிகள் ஆகும் )
நதிகளைப் போல் இந்தியாவில் உள்ள முக்கிய நீர்வீழ்ச்சிகளை பற்றியும் ஏரிகளை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். நீர்வீழ்ச்சி என்றால் எந்த நதியிலிருந்து வருகிறது? எந்த இடத்தில் அமைந்துள்ளது…அதன் சிறப்பம்சங்கள், ஏரிகளின் வகைகள் ( எடுத்துக்காட்டு 1. டெக்டானிக் வகை ஏரிகள் – உதாரணம்/ நைனிடால், தால், உலார் ; 2. லகூன் வகைகள் – உதாரணம், வேம்பநாடு, சில்கா ஏரி ) மற்றும் அமைந்திருக்கும் இடங்களுடன் சேர்த்து தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணக் கேள்வி
# பொருத்துக
சுளியா ( chulia ) நீர்வீழ்ச்சி – ராஜஸ்தான்
லோத் ( Lodh) நீர்வீழ்ச்சி – ஜார்கண்ட்
கபில்தாரா ( Kapildhara) நீர்வீழ்ச்சி- மத்திய பிரதேசம்
எலிஃபன்ட் ( elephant ) நீர்வீழ்ச்சி – அசாம்
இவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
1 only
1,3
2,3,4
4 only ( பதில் ) எலிஃபன்ட் ( elephant ) நீர்வீழ்ச்சி மேகாலயாவில் உள்ளது.
நதிகளையொட்டிய முக்கியமான மற்றொரு தலைப்பு – மாநிலங்களுக்கு நடுவே நடந்த, நடந்துகொண்டிருக்கும் நதி பிரச்னைகள். நதியின் பெயர், இந்த மாநிலங்களுக்கு நடுவே உள்ள பிரச்னை, என்ன காரணம் என்று தெரிந்து வைத்துகொள்ளுங்கள். மெயின் தேர்வுகள், நேர்முகத் தேர்வு என்றெல்லாம் போகும்போது இப்பிரச்னைகளுக்கான தீர்வாக நாம் நினைப்பதை சேர்த்துச் சொன்னோம் என்றால் சிறந்த மதிப்பெண்ணைப் பெற முடியும்.
அடுத்ததாக நாம் பார்க்கப் போவது, நம் நாட்டின் தட்பவெப்ப நிலை மற்றும் பருவகாலங்களை பற்றி. இந்தியாவைப் பொறுத்தவரை இமாலய மலைத் தொடர்ச்சியின் அமைப்பானது மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவை நோக்கி வரும் கடும் குளிர் மற்றும் கன மழையிலிருந்து பாதுகாக்கிறது. நம் நாட்டின் மொத்த தட்ப வெப்பங்களையும் தீர்மானிப்பது மான்சூன் ( monsoon) எனப்படும் பருவம்தான். இதை முக்கியமாக வங்கக்கடல், அரபிக்கடல் ஆகியவற்றிலிருந்து நிலத்தை நோக்கிக் கோடை காலத்தில் வரும் தென்-மேற்குப் பருவமழை ( southwest monsoon ) மற்றும் நிலத்திலிருந்து கடலை நோக்கிச் செல்லும் வட- கிழக்குப் பருவ மழை எனப் பிரிக்கலாம். ஒவ்வொன்றின் காலம், உருவாகும் இடங்கள், மழை அதிகமாகவும் குறைவாகவும் பெய்யும் இடங்கள் தெளிவாகத் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
பொதுவாக புவியியல் பாடங்களில் வல்லுநர்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட வார்த்தைகள் உள்ளன. அதுபோன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து வைத்துக் கொள்வது மிக முக்கியம். அது நமக்கு முதன்மைத் தேர்வுகள் முதல் நேர்முகத் தேர்வுகள் வரையில் நமக்குக் கை கொடுக்கும். குறிப்பாக, மெயின் தேர்வுகளில் கேட்கப்படும் 50 வார்த்தைகள் மற்றும் 20 வார்த்தையில் பதிலளிக்கக் கூடிய கேள்விகள் இதுபோன்று புவியியல் சொற்களை வைத்து நிறையவே அமைந்திருக்கின்றன.
உதாரணச் சொற்கள் :
எல் நினோ (El Niño)
ஜெட் ஸட்ரீம் ( jet stream )
வெஸ்டன் டிஸ்டபர்ன்ஸஸ் ( Western Disturbances )
இது போன்ற சொற்களை வைத்து ஒரு பட்டியலை நீங்களே தயார் செய்து படியுங்கள். நிஜமாகவே புவியியல் உங்கள் கை நுனிக்கு வந்துவிடும்.
— நன்றி விகடன்