நன்றி: Vikatan
வெளியிடப்பட்டது: 16 Sep 2022
பின்தங்கிய கிராமத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளி மாணவர் படைப்புக்கு, சர்வதேச அளவில் மூன்றாம் பரிசு கிடைத்திருப்பதோடு, இளம் ஐன்ஸ்டீன் விருதையும் பெற்றிருப்பது, அந்த பள்ளியைச் சேர்ந்தவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது பஞ்சப்பட்டி. கரூர் மாவட்டத்தில் உள்ள வறட்சியான பகுதியில் இந்த கிராமமும் ஒன்று. இங்கு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்கள் தங்கள் பிள்ளைகளையாவது நன்றாகப் படிக்க வைத்து, நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில், இந்த பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர். அந்த கிராம மக்களின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில், இங்கு பணியாற்றிவரும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் சிறப்பான கல்வி பங்களிப்பை செய்து வருகின்றனர்.
குறிப்பாக முதுநிலை ஆசிரியர் தனபால், மாணவர்களை கண்டுப்பிடிப்புகள், புதிய ஆய்வுகளை செய்ய வைத்து, அவர்களில் பலரை மாணவ விஞ்ஞானிகளாக பல இடங்களில் அங்கீகாரம் வாங்க வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், இந்த அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் பூவரசன் என்ற மாணவர், ஆசிரியர் தனபாலின் வழிகாட்டுதலோடு சர்வதேச அளவில் `இளம் ஐன்ஸ்டீன்’ விருது பெற்றிருக்கிறார்.
‘சமுதாய புதுமை கண்டுபிடிப்புகளுக்கான நிலையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இளைஞர்களின் முயற்சி’ என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான அறிவியல் கண்காட்சி கடந்த 10, 11 ஆகிய இரு தேதிகளில் பெங்களூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், 164 நாடுகளில் இருந்து மத்திய, மாநில பாடத்திட்டத்தில் பயிலும் அரசு/அரசு உதவிபெறும்பள்ளி, மாதிரிப்பள்ளி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், சுயநிதி ஆகிய பள்ளிகளில் இருந்து 44 படைப்புகள் சர்வதேச அளவில் பங்குபெற்றன. இதில், இந்தியாவில் இருந்து 31 படைப்புகள் மற்றும் சர்வதேச நாடுகளான இந்தோனேசியா, உகாண்டா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து 12 படைப்புகள் என 43 படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினார்கள்.
இதில் கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் பூவரசன் மற்றும் யுவராஜா ஆகிய இரு மாணவர்கள், ஆசிரியர் தனபால் வழிகாட்டலுடன் தமிழக அளவில் இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு பெற்று, இந்த சர்வதேச கண்காட்சியில் கலந்து கொண்டார்கள்.
இதில், மாணவர் பூவரசன் தனது கண்டுபிடிப்பான அலைபேசி புளூடூத் மூலம் ரோபோவை கட்டுப்படுத்தி இயக்கும் படைப்பை காட்சிப்படுத்தினார். மேலும், மாணவர் யுவராஜா, இலக்கை கண்டுபிடிக்கும் ரோபோ படைப்பைக் காட்சிப்படுத்தினார். இவற்றில், பூவரசனின் கண்டுபிடிப்பு மூன்றாம் பரிசாக சர்வதேச அளவில் மரியாதையுடன் குறிப்பிடும் இளம் ஐன்ஸ்டீன் என்ற சாதனை பாராட்டுச்சான்று மற்றும் பங்கேற்பு சான்றிதழை பெற்றது. அரசுப்பள்ளிக்கும், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் இரண்டு மாணவர்களும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
சர்வதேச அளவில் இளம் ஐன்ஸ்டீன் விருது பெற்ற பூவரசன், பாராட்டுச்சான்று பெற்ற யுவராஜா, இருவரின் வழிகாட்டியான ஆசிரியர் தனபால் ஆகியோர், கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கீதாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பள்ளி கட்டடக்குழுத் தலைவர் அழகப்பன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பாலமுருகன், பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு, ஊர் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் எனப் பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த மாணவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைய வழியில் எந்திரவியலில் தொடர் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் ஐன்ஸ்டீன் விருதுபெற்ற பூவசரனிடம் பேசினோம்…
கரூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் எங்க ஊர் இருக்கு. கரூரைகூட நாங்க தாண்டியதில்லை. ஆனா, தனபால் சாரும், மற்ற ஆசிரியர்களும் வெறும் பாடப்புத்தக படிப்பு மட்டுமில்லாம, இதுபோல தனித்திறமையிலும் எங்களை ஜொலிக்க வைக்க, தொடர்ந்து ஊக்குவிச்சுட்டு வந்தாங்க. தனபால் சார் நாங்க இன்னும் பல்வேறு ஆய்வு, அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்ய வழிகாட்டிட்டு வர்றார். அப்படித்தான் எங்களோட படைப்புகள் மாநில அளவில் தேர்வாகி, சர்வதேச அளவில் கலந்துகிட்டு. அதுல என்னோட படைப்புக்கு மூன்றாம் இடம் கிடைத்ததோட, இளம் ஐன்ஸ்டீன் விருதும் கிடைச்சிருக்கு. ஏதோ பெரிசா சாதிச்ச உணர்வு ஏற்பட்டிருக்கு.
இன்னைக்கு எங்க ஊரே திரண்டு எங்களைப் பாராட்டும்போது, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. `உங்க புள்ளைங்க ஏதோ சாதனை பண்ணிருக்காங்களாமே’னு எங்க பெற்றோர்களை பலரும் கேட்பது, அவர்களையும் பூரிப்படைய வச்சுருக்கு. அறிவியல் துறையில் பெரிய அளவில் சாதிப்போம். அப்துல்கலாம் மாதிரி பேர் சொல்லும் விஞ்ஞானியாக ஆவதுதான் எனது லட்சியம்!” என்றார் உறுதிமேலிட!