நவீன அடுக்குமாடிக் கட்டடம், மினரல் வாட்டர், கலர்ஃபுல் ஓவியங்களுடன் வகுப்பறைகள், யுபிஎஸ் வசதியுடன் கணினி அறை, தொடுதிரை வசதி, நவீன அறிவியல் ஆய்வகம் எனச் சொல்லும்போதே, உங்கள் கண்கள் முன்பு லட்சங்களில் டொனேஷன் வாங்கும் ஒரு தனியார் பள்ளியின் பிம்பம் நினைவுக்கு வந்தால்… ஸாரி, நீங்கள் நினைப்பது தவறு. சேலம் மாவட்டம், கந்தம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பற்றிய சிறு குறிப்புதான் இவை.
சுதந்திரத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட தொடக்கப் பள்ளி. 2004-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியானது. போதுமான வகுப்பறைகள் இல்லாததால், அருகில் இருந்த கோயிலிலும், மரத்தடியிலும் வகுப்புகள் நடத்தப்பட்டன. தனியார் பள்ளி மோகத்தால், பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் பள்ளிக்கு சவால்விடும் அளவுக்கு நவீனப்படுத்தவும் தலைமையாசிரியை சுபலெட்சுமி தலைமையில், ஆசிரியைகள் பல்வேறு நடவடிக்கையில் இறங்கினர்.
அதுபற்றிப் பேசிய தலைமையாசிரியை சுபலெட்சுமி, ‘‘நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தும், போதுமான வகுப்பறைகள் இல்லாதது எங்களுக்குப் பின்னடைவாக அமைந்தது. தனியார் பள்ளியில் படிச்சாதான் நல்ல வேலைக்குப் போக முடியும்னு நம்பும் பெற்றோர்கள், அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க தயங்கறாங்க. மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த ஆசிரியர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வீடாகப் போய் பேசினோம். அரசுப் பள்ளியில் இலவச சீருடை, காலணி எல்லாம் தந்தாலும் பிள்ளைங்க ஆங்கிலத்தில் பேசணும், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்ல படிக்கணும், கம்ப்யூட்டர் கத்துக்கணும்னு பெற்றோர் ஆசைப்படறது தெரிஞ்சது. பல அரசுப் பள்ளிகள் எங்களுக்கு முன்மாதிரியா அவங்களே முயற்சி செஞ்சு பள்ளியின் தரத்தை உயர்த்தியிருக்கிறதை கவனிச்சோம். அப்படி நாமும் பண்ணலாம்னு முடிவுப் பண்ணி நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டோம். பலர் எங்களை கிண்டல் செஞ்சாங்க. அதையெல்லாம் நாங்க கண்டுக்கலை.
எங்கள் பள்ளி மாணவர்களுக்கு, தனியார் பள்ளிக்கு இணையான வசதியை தரணும்னு தீர்மானமாக இருந்தோம். தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் தந்த நிதியில் மாடிக் கட்டடமாக மாற்றினோம். போர்வெல் வசதி, நவீன கழிப்பிட வசதி, நாப்கின் எரிக்கும் கருவி, வகுப்பறைகளில் மாணவர்களைக் கவரும் வகையில் கார்ட்டூன் ஓவியங்கள், பாடம் சம்பந்தமான ஓவியங்களை வரைஞ்சோம். நவீன ஆய்வகம், தொடுதிரை வசதியுடன் ஸ்மார்ட் கிளாஸ், 4D அனிமேஷன் பயிற்சி, கம்ப்யூட்டர் கிளாஸ், நூலகம் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செஞ்சோம். மாணவர்களுக்குச் சுற்றுச்சூழலில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், மனதை ஒருமுகப்படுத்தவும் மாடித் தோட்டம் அமைச்சிருக்கோம். மாடித் தோட்டத்தை மாணவர்களே அமைச்சு, பராமரிச்சிட்டு வர்றாங்க’’ என்கிறார் பூரிப்புடன்.
பள்ளியின் தமிழாசிரியர் பார்வதியின் பங்களிப்பும் இதில் கணிசமாக உள்ளது. முகநூல் மூலமா பலரிடம் நன்கொடை திரட்டி இருக்கிறார். ‘‘சமூகத்தில் நடக்கும் பல விஷயங்கள் ஃபேஸ்புக் வழியே பரவலா பேசப்படுது. அதை நாம எப்படி நல்ல முறையில் பயன்படுத்தலாம்னு யோசிச்சோம். எங்க பள்ளியின் சூழல் பற்றி ஃபேஸ்புக்ல எழுதினதும், பலரும் உதவினாங்க. இப்ப வரைக்கும் அவங்களின் ஆர்வமும் உதவியும் கிடைச்சுட்டே இருக்கு. ரோட்டரி, லயன்ஸ் கிளப்னு நிறைய உதவிகள் வந்தது. ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து பெற்றவர்களுக்கான விளையாட்டுப் போட்டியை நடத்தினோம். அதுல கலந்துகிட வந்தவங்க பள்ளியில நடந்த மாற்றங்களை கண்கூடா பார்த்தாங்க. ஐஞ்சு வருஷத்துல பல மாற்றங்களைக் கொண்டு வந்தோம். இப்ப ஆங்கில மீடியமும் கொண்டுவந்திருக்கோம். தனியார் பள்ளிக்கு தன் குழந்தைகளை படிக்க வைக்க அனுப்பின பலரும், இங்க மறுபடியும் தன் குழந்தைகளை இங்க வந்து சேர்த்தாங்க. இதையெல்லாம் எங்க உழைப்புக்கு கிடைச்ச பரிசா பார்க்கிறோம்’’ என நெகிழ்கிறார் பார்வதி.
– விகடன்