மதிப்பெண்ணைக் கூட்டும் மண் வகைகள்! – டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை
டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்
# 11 முதன்மை தேர்வுக்கான பொதுப் பாடங்கள்: இந்திய புவியியல்
‘இந்தியாவில் உள்ள மண் வகைகள் யாவை?’ – போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக்கொண்டிருப்பவர்களுக்கு இது எளிதான கேள்வி என்று தெரியும். இது UPSC தேர்வில் என்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி. முதன்மைத் தேர்வுகளிலோ அல்லது மெயின் தேர்வுகளிலோ அல்ல, இறுதிச் சுற்றான நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்டது. முதன்மைத் தேர்வுக்காக நாம் படிக்கும் பாடங்கள் தேர்வின் எந்த நிலையிலும் நமக்குக் கைகொடுக்கும். ஆக, முதன்மைத் தேர்வுக்காக நாம் போடும் அடித்தளம் மிக முக்கியம். ‘பில்டிங் ஸ்ட்ராங்கு; ஆனா பேஸ்மென்ட் வீக்கு’ என யாரும் நம்மைக் கலாய்க்காத வண்ணம் பலமானதாக அமைய வேண்டும்.
இந்தியாவில் உள்ள மண் வகைகளில் முக்கியமானது அலுவியல் (alluvial soil). வட இந்தியச் சமவெளி உள்ளிட்ட 40 சதவிகிதப் பகுதிகளில் இந்த அலுவியல் மண் காணப்படுகிறது. தென் இந்தியாவின் டெல்டா பகுதிகளிலும் இந்த மண் வகையைக் காணலாம். சென்ற பகுதியில் பார்த்ததுபோல் காதர் (புதியது) மற்றும் பாங்கர் (பழையது) என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இவ்வகைகளைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்தது, பிளாக் (கறுமை) மண் வகை. இவை குறிப்பாக தக்காண பீடபூமி (Deccan plateau)யில் காணப்படுகின்றன. மேக்னட்டைட் (Magnetite) மற்றும் ஆர்கானிக் கலவைகள் அதிக அளவில் உள்ளதால், இது கறுமை நிறத்தில் உள்ளது. இந்த மண்ணில் பஞ்சு நன்றாக விளையும். அடுத்த முக்கிய மண் வகை, சிவப்பு மண் வகை ( Red Soil ). ஃபெரிக் ஆக்ஸைடு (ferric Oxide) அதிக அளவில் உள்ளதால் இது சிவப்பு நிறத்தினைப் பெறுகிறது. லேட்டரைட் (laterite) அடுத்த மண் வகை. அதிக வெப்பமும் அதிக மழையும் உள்ள இடங்களில் அதிகம் காணப்படுகின்றது. சிலிக்கா (silica) மற்றும் இரும்புச் சத்தின் (iron) ஊடுறுவல் ( leaching) இதில் சற்று அதிகமாகவே உள்ளது. அடுத்த மண் வகை பாலைவனத்தில் காணப்படும் ஏரிட் (Arid) வகை. பொதுவாக, பாலைவனப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதில் உப்பின் சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. மார்ஷி/ பீட்டி ( marshy / peaty ) வகைகள் ஈரப்பதம் சற்று அதிகமாக உள்ள இடங்களில் காணப்படும். வன ( forest / mountainous) மண் வகைகள், அதிக மழை பெய்யக்கூடிய பகுதிகளில் காணப்படும். அதிகம் மட்கிய தன்மை (humus content) இல்லாததால் இதன் காரத்தன்மை (acidic) சற்று அதிகமாகவே உள்ளது.
உதாரண கேள்வி:
நர்மதா – தபதி கரை சமவெளியில் அலுவியல் மண் வகை காணப்படுகிறது
அலுவியல் மண்வகையில் பாஸ்பரஸ் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
Statement I is correct
Statement II is correct
Both statement I and statement II are correct ( பதில் )
Both statement I and statement II are wrong
இதுதவிர, இந்திய மக்கள்தொகை, அதன் வளர்ச்சி, அதற்கான காரணங்கள், அதில் ஆண் – பெண் சதவிகிதம், படிப்பறிவு விகிதம், கிராம – நகர வளர்ச்சி , கிராம- நகரப் பாகுபாடுகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் தொகுத்துவைத்துக்கொள்வது நல்லது. இந்த முக்கியக் குறியீடுகளில் அதிகம் உள்ள மாநிலங்கள், நகரங்கள், குறைவாக உள்ள மாநிலங்கள், நகரங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அடுத்து நாம் பார்க்கப்போகும் தலைப்பு – இந்தியாவில் உள்ள வளங்களையும் ஆற்றல்களையும் (Resources and Energy)பற்றி. புதுப்பிக்கத்தக்க (renewable) மற்றும் புதுப்பிக்க முடியாத (non renewable) வளங்கள் மற்றும் ஆற்றல் எவை எவை என்று பட்டியலிட்டு, அவற்றில் நம் நாட்டின் செயல்பாடுகள், முக்கிய அரசுத் திட்டங்கள், அதிகப் பயன்பாட்டில் உள்ள இடங்கள் மற்றும் அவைகளைப் பற்றிய (குறிப்பாக, அன்றாட நிகழ்வுகளில் வரும் செய்திகள் உட்பட) தகவல்களைக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.
உதாரண கேள்விகள் :
# I இந்தியாவிலேயே வெப்ப சக்தி ( thermal power ) அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் மஹாராஷ்டிரா
II இந்தியாவில் நீர் மின் சக்தி ( Hydro electric power ) அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் பஞ்சாப்
Statement I is correct
Statement II is correct
Both statements are correct ( பதில் )
Both statements are wrong
சூரியஒளி சக்தி, காற்று ஆற்றல் சக்தி, அணு சக்தி போன்றவற்றைப் பற்றிய குறிப்புகள் மிக முக்கியம். இவைகளுக்காக செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களும் மிக முக்கியம்.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் வேளாண் முறைகள்- உதாரணம் – ஷிஃப்டிங் (shifting) , சப்சிஸ்டென்ஸ்(subsistence), ப்ளான்டேஷன் ( plantation ) – மாநில வாரியாக), பயிர் வகைகள் (மாநில / ஊர்கள் வாரியாக) அத்துப்படியாக இருக்க வேண்டும். அதே அளவு முக்கியம் நீர்ப் பாசனம். நீர்ப் பாசன வகைகள், இந்தப் பகுதியில் முக்கிய அணைகள், நீர்ப் பாசனத் திட்டங்கள் ஆகியவற்றையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியப் புவியியல் என்பது நாம் அனைவரும் பள்ளியில் படித்த, எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய பாடம். ஏற்கெனவே நாம் மூளையில் பதிந்தவற்றை சற்று மெருகேற்றி போட்டித்தேர்வுகளுக்கு ஏற்றதுபோல் தயார் செய்து வைத்துக்கொண்டால், அதுவே நமக்கு மிகப் பெரிய பலமாக நம் தேர்வுகளில் வெளிப்படும்.
— நன்றி விகடன்