இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

July 04, 2018

ஸ்டார்டிங்தான் ட்ரபிள்…மத்தபடி, அரசியலமைப்பில் ஸ்கோர் அள்ளலாம்!

#16 இந்திய அரசியல் சாசனம் ( Indian constitution) பகுதி-1

முதன்மைத் தேர்வுக்கான பொதுப் பாடங்கள் – இந்திய அரசியலமைப்பு (Indian Polity)

யு.பி.எஸ்.சி

வரலாறு, புவியியல் மற்றும் சில சிறப்புப் பகுதிகளை முடித்துவிட்டு இப்போது மிக முக்கியமான பகுதியான அரசியமைப்புக்கு வந்துள்ளோம். போட்டித்தேர்வுகள் வண்டி என்றால் பாலிட்டி(அரசியலமைப்பு) அதன் சக்கரங்கள். போட்டித்தேர்வுகள் உடல் என்றால் பாலிட்டிதான் அதன் இதயம். போட்டித்தேர்வுகள் ‘ அவெஞ்சர்ஸ் ‘ என்றால் பாலிட்டிதான் ‘ ஐயன் மேன்’ (Iron Man). இது மிக முக்கியமான பாடம்தான், ஆனால், சிலர் கூறுவதைப்போல மிகக் கடினமானது அல்ல. மனதை ஒருங்கிணைத்துக் கவனம் செலுத்தினால் எளிதாக பாலிட்டியலில் மதிப்பெண்களை அள்ளலாம்.

கேள்விகளைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டுகளில் யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சராசரியாக 12-15 கேள்விகள் வரை கேட்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, 2017-ம் ஆண்டு 22 கேள்விகள் பாலிட்டியில் இருந்து இடம்பெற்றுள்ளன. குறைந்தபட்சமாக, சில ஆண்டுகளில் 5 -9 கேள்விகள் வரையில் கேட்கபட்டுள்ளன. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளிலும் சராசரியாக15 கேள்விகள் வரை எதிர்பார்க்கலாம். இப்போது பாடத்திற்குள் செல்வோம்.

யு.பி.எஸ்.சி தேர்வுகள்

முதலில், நம் அரசியல் சாசனத்தின் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம். பிரிட்டிஷ் சாசனத்துக்கு மாற்றாக வந்தாலும், அதை அப்படியே பிரதிபலிக்காமல் பல நாடுகளின் அரசியல் சாசனங்களில் உள்ள சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்ட சிறப்பைப் பெற்றது நம் சாசனம். இது முழுமையாகக் கையால் எழுதப்பட்ட ஒன்று. முதலில் 395 ஆர்ட்டிகள்ஸ் ( articles), 8 ஷெடியூல்கள் ( schedule ), 22 பகுதிகளைக்கொண்டது (parts). பல சீர் திருத்தங்களுக்குப் பிறகு தற்போது 450 ஆர்ட்டிகள்ஸ் , 12 ஷெடியூல்கள் ( schedules), 25 பகுதிகளைக் (parts) கொண்டுள்ளது. மற்ற நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட சிறப்பம்சங்களைத் தெரிந்து வைத்துக்கொள்வது மிக அவசியம்.

உதாரண கேள்வி
சிறப்பம்சம்எடுக்கப்பட்ட நாடு
அடிப்படை உரிமைகள் ( fundamental rights)அமெரிக்கா
பொதுப்பட்டியல் ( concurrent list )ஆஸ்திரேலியா
அடிப்படைக் கடமைகள் ( fundamental duty )ரஷ்யா
அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள்( directive principles of state policy)அயர்லாந்து

இவற்றில் எவை சரியாகப் பொருத்தப்படவில்லை

அ) 1 only
ஆ) 2,3,4
இ) 1,3,4
ஈ) None ( பதில் ) காரணம் அனைத்துமே சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன.

நம் அரசியல் சாசனத்தின் 10 முக்கிய அம்சங்களை இப்போது பார்க்கலாம்

* பார்லிமென்டரி ( parliamentary) முறையிலான ஜனநாயகம்
* ஃபெடரல் முறை ( மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்கள் தனித்தனியாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன)
* ஃபெடரல் அல்லாத முறை – அதாவது மத்திய மற்றும் மாநிலங்கள் என்று பிரிக்கப்படாத அம்சங்கள் ( ஒரே குடியுரிமை ( citizenship), ஒரே அரசியல் சாசனம் ( constitution), நாடாளுமன்றத்தின் சில தனிப்பட்ட அதிகாரங்கள் போன்ற உதாரணங்களால்)
* மாற்றக்கூடிய மற்றும் மாற்ற முடியாத ( Flexible and rigid ) பகுதிகளைக்கொண்டது.
* ஜுடீசியல் சுப்ரமஸி ( judicial supremacy ) / உச்ச நீதிமன்றத்தைத் தலைமையாகக் கொண்ட ஒருங்கிணைந்த நீதித்துறை கட்டமைப்பை நம் சாசனம் குறிப்பிடுகிறது
* ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளையும் ( Fundamental rights ) ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஆற்ற வேண்டிய அடிப்படைக் கடமைகளையும்( Fundamental duties ) அரசு கொள்கையின் கட்டளைக் கோட்பாடுகள் ( Directive principles of state policy ) ஆகியவற்றை சாசனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
* மதச்சார்பின்மை ( secularism )
* ஓட்டுரிமை ( Universal adult franchise )
* அவசரச் சட்டங்கள் ( emergency provisions ) – Art.352 , Art. 356 , Art 360 உள்ளிட்டவை
* மூன்றடுக்கு அரசாங்கம் – ( 73 மற்றும் 74-ம் சாசன திருத்தத்தின்படி )

மேலே கூறியதுபோல நம் சாசனத்தில் 12 அட்டவணைகள் உள்ளன. ஒவ்வொன்றைப் பற்றியும் நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உதாரண கேள்வி:

1) ஆறாவது அட்டவணையில் அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பகுதிகளின் நிர்வாகத்தைப் பற்றியது
2) எட்டாவது அட்டவணை மொழிகளைப் பற்றியது.

இவற்றில் எது தவறு
அ) 1 only
ஆ) 2 only
இ) Both
ஈ) None ( பதில் )

அடுத்ததாக, நாம் பார்க்கப் போவது நம் அரசியல் சாசனத்தின் முகவுரையைப்( preamble ) பற்றி. அமெரிக்க சாசனத்தின் முகவுரையில் இருந்து முக்கிய அம்சங்கள் பின்பற்றப்பட்டு ஜவஹர்லால் நேரு அவர்களால், கான்ஸ்டிடூயென்ட் அசெம்பிளியில் ( constituent assembly) அறிமுகப்படுத்தப்பட்டது. சோசியலிஸ்ட் ( socialist ), செக்கியூலர் (secular), இன்டெக்ரிட்டி ( integrity ) ஆகிய மூன்று வார்த்தைகளும் 42-வது திருத்தத்தின் (amendment) வாயிலாக சேர்க்கப்பட்ட வார்த்தைகள். முகவுரையில் (preamble) உள்ள முக்கிய அம்சங்களை வார்த்தைகள் வாரியாக நன்றாகத் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். அதேபோல் பாலிட்டியைப் பொறுத்தவரை, முக்கியத் திருத்தங்கள் ( amendments) குறிப்பாக 42-வது( 1976)மற்றும் 44-வது (1978) திருத்தங்கள், முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள், அதன் சாராம்சங்கள் ஆகியவற்றைத் தெளிவாகத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் (உதாரணம் கேசவானந்த பாரதி வழக்கு, கோலக்நாத் வழக்கு போன்றவை).

ஆரம்பத்தில் நம்மில் சிலருக்கு பாலிட்டி பாடங்களைப் படிப்பதில் ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இருக்கலாம். அதையெல்லாம் கடந்து, நம் லட்சியமே குறியாக சற்று அதிகமாகக் கவனம் செலுத்தினோம் என்றால் வெற்றி எளிது.

— டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

— நன்றி விகடன்

Copyright © 2023 KalviApp. All rights reserved.