இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

April 11, 2023

‘புதிய சவால்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்!’ – நீட் பற்றி நீதிபதி சந்துரு

நன்றி: Vikatan

வெளியிடப்பட்டது: 06 Feb 2017

தமிழக மாணவர்களின் திறனை மேம்படுத்திக் கொள்ள நீட் தேர்வு அவசியம், புதிய சவால்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுங்கள், என்கிறார் நீதிபதி சந்துரு.

நீட் தேர்வு மாணவர்களுக்கு சுமையான ஒன்றில்லையா? இத்தேர்வுகளால் தனியார் பள்ளிகளின் வணிகமயம் அதிகரித்துவிடுமே?

முதலில் ஒன்றை புரிய வைக்க விரும்புகிறேன். நீட் தேர்வு என்பது சுமையல்ல. அரசு சேர்க்கைக்கு உரிய இடங்களை கொண்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் இதுவரை தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்கள். இதுதவிர,மற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலுள்ள இடங்கள், ஜிப்மர், ராணுவ மருத்துவக் கல்லூரி போன்ற கல்லூரிகளுக்காக பணத்தை கட்டி எழுதப்படும் தேர்வுகள் இனி தேவையில்லை. நீட் தேர்வு எழுதினாலே இந்தியாவில் உள்ள அத்தனை மருத்துவ கல்லூரிகளிலும் சேருவதற்கான ஒரே தேர்வு நீட் என்பதால், அதை மாணவர்கள் எழுதுவதே வசதியானது. இந்திய மருத்துவ கவுன்சில் 2010-ல் உருவாக்கிய ஒழுங்கு முறை விதிகளை உச்சநீதிமன்றம் 2016-ல் ஏற்றுக் கொண்டபின், மத்திய அரசும் புதிய சட்டத்தை இயற்றியுள்ளதனால் நீட் தேர்வுகளை இனி தவிர்க்க முடியாது. எந்த நுழைவுத்தேர்வாக இருந்தாலும் அதற்கு தனி தயாரிப்பு தேவை.

தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்ப்பவர்களுக்கு நீங்க சொல்லும் பதில்?

இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலிருந்தும் நீட் தேர்வுக்கான எதிர்ப்பு வரவில்லை. நாமும் காலத்தை ஒட்டிய புதிய சவால்களுக்குத் தயாராவது அவசியம். மேலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அடித்துவந்த கொள்ளைகளுக்கு நீட் தேர்வு முறைகளினால் ஓரளவு செக் வைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இன மாணவர்கள் இட ஒதுக்கீடு பெற முடியுமா? இவர்கள் சந்திக்க இருக்கும் பிரச்னைக்கான தீர்வு…

நீட் தேர்வு என்பது மாணவ மாணவிகளின் திறன்களை பரிசோதிக்க மட்டுமே. மற்றபடி நீட் ஒழுங்குவிதிமுறைகளின்படி, மாநிலங்களிலுள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெறும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. +2 தேர்வில் ஏறத்தாழ 8 லட்சம் பேர் வெற்றிபெற்றாலும், மருத்துவக் கல்லூரியிலுள்ள இடங்கள் மூவாயிரத்தைத் தாண்டாது. இடஒதுக்கீட்டிற்கான இடங்கள் ஒவ்வொரு வருடமும் பூர்த்தி செய்யப்பட்டு வருவதோடு, எந்த சமூகத்திற்கான ஒதுக்கப்பட்ட இடங்களும் பூர்த்தியாகாமல் இதுவரை வைக்கப்பட்டதில்லை.

நீங்கள் நீட் தேர்வை ஆதரிக்க காரணம்?

நீட் தேர்வு ஒழுங்கு விதிகள் இயற்றப்பட்டு, அதை உச்சநீதிமன்றம் அமல்படுத்த உத்திரவிட்ட பிறகு அதுதான் நம் நாட்டுடைய சட்டம். எனவே அதை எதிர்ப்பது மூடத்தனம். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இனி நீட் தேர்வுகள் மூலமே மருத்துவக் கல்லூரி சேர்க்கைகள் நடத்தப்படும். அதை யாரும் ஆதரிப்பதனாலோ (அ) எதிர்ப்பதனாலோ நிலைமை மாறப்போவதில்லை. நீட் பிரச்னையை மெரினா மன்றங்களில் முடிவு செய்ய முடியாது.

நீட் தேர்வால் தமிழக நகர்புற, கிராமப்புற மாணவர்கள் பலன் அடைவார்கள் என்று நினைக்கிறீர்களா?

கடந்த 65 வருடங்களாக நகர்புறம் -எதிர்- கிராமப்புறம் என்ற வாக்குவாதங்கள் நீதிமன்றங்களில் எடுபடவில்லை. கோழிப்பண்ணைகள் எல்லாம் கல்விப்பண்ணைகளாக மாற்றப்பட்டு வரும் நாமக்கல் பள்ளிகள் கொடுக்கும் பயிற்சிகளின் மூலம் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களும் கிராமப்புற மாணவர்கள் என்ற கணக்கில்தான் வருவார்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம். அதனால் யார் பலனடைவார்கள் என்று யோசிப்பது தேவையற்ற வாதம். புதிய சவால்களை மேற்கொள்ள நமது மாணவர்களுக்கு அரசே பயிற்சி அளிக்க முற்படுவதே இன்றைய காலத்தின் தேவை. அதுமூலம் மட்டுமே பல தனியார் நிறுவனங்களின் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு கொள்ளைகள் கட்டுப்படுத்தப்படும்.

Copyright © 2023 KalviApp. All rights reserved.