இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

May 28, 2019

வயலும் வாய்ப்புகளும்…

விவசாயம்தான் இந்தியாவின் முதுகெலும்பு.ஆனால் வேளாண்துறைப் படிப்போ பலராலும் புறக்க ணிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. இன்று நிலைமை மாறியிருக்கிறது.

இந்தியாவில் வருடத்துக்கு இரண்டு தனியார் வேளாண் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்படுவதையும், எல்லா வேளாண் கல்லூரிகளிலும் சில மணிநேரத்திலேயே காலியிடங்கள் நிரம்பிவிடுவதையும் பார்க்க முடிகிறது. வேளாண் கல்வி எப்படி இவ்வளவு பிரபலமானது; அதன் முக்கிய அம்சங்கள் என்ன; இந்தத் துறையில் படித்தால் என்ன மாதிரியான வேலைகளுக்குச் செல்லலாம்?

30 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட மக்கள் தொகை இப்போது அதிகம்; விவசாய நிலங்களின் பரப்பளவு குறைவு. ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி அதிகரித்திருக்கிறது.

1960-களில் 48 மில்லியன் டன்னாக இருந்த வேளாண் உற்பத்தி இன்று 283 மில்லியன் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. குறைவான நிலப்பரப்பிலும், அதிகமான உணவை உற்பத்தி செய்யக் காரண மானவர்கள், வேளாண்மை படித்த மாணவர்களே.

வேளாண்மை என்றால் மண்வெட்டியைப் பிடித்துக்கொண்டு சேற்றில் கால்வைத்து நாற்று நடுவது மட்டுமல்ல, எங்கு, எப்படி, எதை விவசாயம் செய்தால் லாபம் கிடைக்கும் என்கிற புரிதலைக் கொடுப்பதும் இந்த வேளாண்துறைதான். எப்போதும் சமுதாயத்தில் ஏற்படும் தேவைகளைப் பொறுத்தே இளைஞர்கள் கல்வியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தவகையில் தற்போது தமிழகம் மட்டுமன்றி நாடு முழுக்கவே வேளாண்துறையில் நிபுணர்களின் தேவை அதிகமாகியுள்ளது.

வேளாண் படிப்புகள் பற்றியும், அந்தப் படிப்புகளால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதன்மையர் (Dean) முனைவர் மா. கல்யாண சுந்தரத்திடம் பேசினோம்.

“அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் வேளாண்மைப் பிரிவு பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தப் பிரிவை எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இளங்கலை பயிலும் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். வேளாண் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வேளாண் அலுவலர், வேளாண் உதவி அலுவலர் என அரசுப் பணியிடங்கள் காத்துக் கிடக்கின்றன.

இவை தவிர, உரம் தயாரிக்கும் நிறுவனங்கள், விதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், டீ, காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகள் எனத் தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் பணிவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இங்கு மொத்தமாக இயற்பியல், வேதியியல், வேளாண்மை, வணிகவியல் உள்ளிட்ட 27 பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன. அதனால் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளில் வேளாண்மை படித்தவர்கள் பெரும்பான்மையாகத் தேர்ச்சி பெறுகிறார்கள். வங்கிப் பணியிடங்களில் வேளாண் படித்தவர்களுக்கெனத் தனிப்பணிகளும் இருக்கின்றன.

வேளாண்மை படித்தவர்கள் உள்ளூர் கிராமங்களில் இருக்கும் விவசாயிகளுக்கு, பயிர் நோய்கள், உரம் மேலாண்மை போன்ற ஆலோசனைகளை வழங்கலாம். எம்.எஸ்ஸி வேளாண்மை முடித்தால், தனியார் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட வாய்ப்புகள் கிடைக்கும். முனைவர் பட்டம் பெற்றால் வேளாண் விஞ்ஞானியாக உயரலாம்.

வேளாண் கல்வி பயின்றால் இன்றைய நிலைக்கு, குறைந்தபட்சம் மாதம் ரூ.30,000 சம்பாதிக்கலாம். கிராமப்புற மாணவர்கள் குறைவான கட்டணத்தில் பயில (வருடத்துக்கு 35,000 ரூபாய்) நம்முடைய பல்கலைக்கழகம் வாய்ப்பளிக்கிறது.

ஏழை மாணவர்களுக்கு வங்கிகளில் கல்விக் கடனும் வாங்கித் தருகிறார்கள். மனிதர்கள் உணவு உண்டு வாழும்வரை வேளாண்மை படித்தவர்களுக்கு உலகின் ஏதாவதொரு மூலையில் வேலை இருந்துகொண்டேதான் இருக்கும்.

இந்தப் பல்கலைக் கழகம் நடப்பு (2019-20) கல்வியாண்டில் 10 பட்டப் படிப்புகளை 14 உறுப்பு மற்றும் 27 இணைப்புக் கல்லூரிகள் மூலமாக வழங்குகிறது. இந்த வருடம் 3,910 இடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன” என்றார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அறிவிப்பின்படி, வேளாண்மை படிக்க விரும்புவோர் மேல்நிலைப் படிப்பில் சில பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்திருக்க வேண்டும். பொதுக் கல்வியில் (Academic) தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கீழ்க்காணும் பாடங்களைப் படித்திருக்க வேண்டும்.

பி.எஸ்ஸி வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், பட்டு வளர்ப்பு, வேளாண் வணிக மேலாண்மை மற்றும் பி.டெக் உயிர்த் தொழில்நுட்பவியல் (bio technology) படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களுடன் கணினி மற்றும் கணிதம் அல்லாத அறிவியல் படிப்பைப் படித்திருக்க வேண்டும். இல்லையேல் கணினி அறிவியல், உயிரியல், நுண்ணுயிரியல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் படித்திருக்க வேண்டும்.

— நன்றி விகடன்

Copyright © 2023 KalviApp. All rights reserved.