இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

July 03, 2018

TNPSC ஒன்டே மேட்ச்; UPSC டெஸ்ட் மேட்ச்! நீங்கள் தோனியா? -டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை!

TNPSC ஒன்டே மேட்ச்; UPSC டெஸ்ட் மேட்ச்! நீங்கள் தோனியா? -டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை!
டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

#7 முதன்மை தேர்வுக்கான பொதுப் பாடங்கள்:
TNPSC ஒன்டே மேட்ச் ; UPSC டெஸ்ட் மேட்ச் ! நீங்கள் தோனியா?

முதன்மைத் தேர்வுகளில் சொல்லி அடிக்க சில எளிய வழிமுறைகள்!

முதன்மைத் தேர்வுகளைப் பொறுத்தவரையில் UPSC-க்கும் TNPSC-க்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், ‘நெகடிவ் மார்க்கிங்’ ( Negative Marking). இது TNPSC முதன்மை தேர்வு முறைகளில் இல்லை. UPSC முதன்மை தேர்வுகளில் உண்டு. இரண்டின் அணுகுமுறைகள்தான் வேறு வேறு. இதையே, கிரிக்கெட் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், TNPSC முதன்மைத் தேர்வுகள் 50 ஓவர் போட்டிகள் போல் – கிடைத்த ஓவர்களில் எவ்வளவு ரன்களை அடிக்க முடிகிறதோ வேறு எதைப்பற்றியும் கவலைப் படாமல் அடித்து ஸ்கோரை உயர்த்துகிறார்கள். அதேபோல்தான், நெகடிவ் மார்க்கிங் இல்லாத TNPSC முதன்மை தேர்வுகளில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உரிய நேரத்துக்குள் அனைத்து கேள்விகளையும் எதிர்கொண்டால் எந்தவிதத் தடையும் இல்லாமல் ஒரு நல்ல ஸ்கோரை நோக்கி முன்னேற ஒரு வாய்ப்பாக அமையும்.

UPSC முதன்மை தேர்வுகளுக்கான அனுகுமுறை என்பது வேறு. UPSC முதன்மைத் தேர்வுகள் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கை எதிர்கொள்வது போல. டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்யும் போது பேட்ஸ்மன்கள் மிகக் கவனமாகவே ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்வர். எல்லா பந்துகளையும் அடிக்காமல், தங்களால் உறுதியாக அடிக்க முடியும் என்று நம்பும் பந்துகளை மட்டும் அடித்துவிட்டு, மற்ற பந்துகளை அடிக்காமலேயே விட்டுவிடுவர். UPSC முதன்மை தேர்வுகளிலும் அதேபோல் எந்தக் கேள்வியை அட்டென்ட் செய்ய வேண்டும்…எந்தக் கேள்வியை விட வேண்டும் என தேர்வுக் களத்தில் நாம் போடும் கணக்கே வெற்றியில் பெரும்பங்கு வகிக்கிறது. 2010 ஆம் ஆண்டு நான் முதன்மை தேர்வினை எழுதும் பொதுப் பாடங்களில் மொத்தம் 150 கேள்விகள் இருந்தன. 150 கேள்விகளில் நான் பதிலளித்தது 104 கேள்விகளுக்கு மட்டுமே. எனக்கு சுத்தமாக விடை தெரியாத 46 கேள்விகளை விட்டுவிட்டேன். மொத்தத்தில் எனக்கு 74 விடைகள் சரியானதாக அமைந்தது. அதுவே முதன்மைத் தேர்வில் வெற்றி பெற போதுமானதாக இருந்தது. அந்த ஆண்டு எனக்குச் சரியாக அமைந்த 74 சரியான விடைகளைவிட அதிகமாக சரியான விடைகள் அமைந்த பலரால் அதே முதன்மை தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. காரணம் தேவையில்லாமல் அதிக கேள்விகளை அவர்கள் எதிர்கொண்டதுதான்.

எத்தனை கேள்விகளை நாம் எதிர்கொள்வது சரி? தேர்ச்சி பெற எத்தனை கேள்விகள் தேவை என்று கேட்டீர்கள் என்றால், இத்தனை கேள்விகளை மட்டும் எதிர்கொண்டால் போதும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. காரணம், நம்முடைய கல்லூரி நுழைவுத் தேர்வுகளைப்போல வினாத்தாளின் கடின அளவை பொருத்து அந்த ஆண்டின் கட் ஆஃப் மதிப்பெண்கள் ஏறவோ அல்லது இறங்கவோ கூடும். அதாவது மிக எளிதான கேள்வித்தாளாக அமைந்தால் கட் ஆஃப் சற்று உயரும். கேள்விகள் சற்று கடினமானதாக அமைந்தால் கட் ஆஃப் சற்று குறையவும் செய்யலாம். ஆக, இத்தனை கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. இதற்கு நிறைய பயிற்சிகள் தேவைப்படுகின்றன. ஆனால், முதலில் நாம் மனதில் வைத்து கொள்ள வேண்டிய விஷயம் -‘ கேள்விகள் கடினமாக இருக்கு’ என சோர்ந்து போக வேண்டிய அவசியம் இல்லை. ‘ கேள்விகளை எளிதாகக் கேட்டுவிட்டார்கள்’ என்ற மகிழ்ச்சியில் கவனத்தைச் சிதற வேண்டிய அவசியமும் இல்லை. நமக்கு வந்த கேள்விகள் கடினம் என்றால், பெரும்பாலானோருக்கும் அது கடினம்தான். அதேபோல் நமக்கு வந்த கேள்விகள் எளிதானவை என்றால், பெரும்பாலானோருக்கும் அது எளிதானதுதான்.

இன்னும் சொல்லப் போனால் இதற்குக் கிரிக்கெட்டில் இருந்தே உதாரணங்களைச் சொல்ல முடியும். எவ்வளவு பெரிய பேட்ஸ்மனாக இருந்தாலும், பேட்டிங் செய்வதற்காக களத்துக்குள் சென்றவுடன் பார்க்கும் முதல் விஷயம் அந்த ‘பிட்ச்’ எப்படிப்பட்டது என்பதுதான். அதனைப் பார்த்தவுடன் ஒரு நல்ல பேட்ஸ்மேனால் அந்த பிட்ச்சின் மூலம், ‘ எவ்வளவு ரன் எடுக்க முடியும்? எது நல்ல ஸ்கோராக அமையும்?’ என்பதைக் கணித்துவிட முடியும். அதற்குத் தகுந்தபடி அந்த பேட்ஸ்மேன் தன் ஆட்டத்தைத் தொடங்குவார். அதேபோல்தான் தேர்வில் வரும் வினாத்தாள்களை பார்த்தவுடன், பிட்சைப் பார்த்த தோனி போல, ‘ இந்த வினாத்தாள் எப்படி? எவ்வளவு சரியான விடைகள் தேவைப்படும்?’ எனக் கணிக்கும் அளவுக்குத் தயார்படுத்திக் கொள்ள முடியும். அப்படி நம்மைத் தயார்படுத்திக் கொள்ள சிறந்த வழி – மாதிரித் தேர்வுகள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேள்விகளை எதிர்கொண்டு பாருங்கள். ஒரு நாளைக்கு 100 மாதிரி கேள்விகளை எதிர்கொண்டால் மாதம் 3000 கேள்விகள்! ஓர் ஆண்டில் 12,000 கேள்விகள். 12,000 கேள்விகளை எதிர்கொண்டவன் என்ற தன்னம்பிக்கையோடு முதன்மை தேர்வில் அமர்ந்தால், ஒருவித உத்வேகமும் புத்துணர்ச்சியும் தானாகவே வரும். அதுவே, வெற்றிக்கோட்டை நோக்கி நம்மை அழைத்துச் சென்றுவிடும். ஆக, தினமும் மாதிரி கேள்விகளை எதிர் கொள்ளுங்கள். நிச்சயம் பலன் தரும். ‘ தேவையுள்ள ஆணி எது தேவையில்லாத ஆணி எது’ என்று எப்படித் தெரிந்து கொள்வது என்ற நகைச்சுவை வசனத்தைப் போல, தேவையான கேள்வி எது? நாம் கைவிட வேண்டிய கேள்வி எது என்பதை அறிய வேண்டும் என்றால், தொடர்ந்து மாதிரிக் கேள்விகளை எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். நான் வீட்டில் எழுதும் மாதிரி தேர்வுகளைப் பெரும்பாலும் என் அம்மாதான் திருத்தி, மதிப்பெண் போடுவார். சில நேரங்களில் நானே திருத்தி கொண்டதும் உண்டு. ஆக, மாதிரித் தேர்வுகள்தான் உங்களுக்கான பயிற்சி. அதில் அதிகபடியான கவனத்தைச் செலுத்துங்கள்.

என்னதான் நன்றாகப் பயிற்சி எடுத்துக் கொண்டு ஒரு கிரிக்கெட் வீரர் போட்டிக்குச் சென்றாலும், அன்றைய போட்டியால் அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் முக்கியம். சரியாக விளையாடாமல், ‘ நான் நன்றாக பயிற்சி செய்தேன், ஆனால் ஆட்டத்தில் ஜொலிக்க முடியவில்லை’ என தனக்குத் தானே சமாதானம் சொல்லி கொண்டாலும், கடந்து போன வாய்ப்பு இனி வரப் போவதில்லை. அதேபோல்தான் நம்முடைய தேர்வு நாள்களும். என்னதான் நாம் தயார் நிலையில் இருந்தாலும் தேர்வு நாள் அன்று எப்படிச் செயல்படுகிறோம் என்பதே முக்கியம். ஆக, சரியான பயிற்சியுடன் உள்ளே இறங்கினால், பல சிக்சர்கள் நிறைந்த சதம் அடிப்போம் !

— நன்றி விகடன்

Copyright © 2023 KalviApp. All rights reserved.