இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

July 04, 2018

குரோர்பதிக்கும் புவியியலுக்கும் என்ன சம்பந்தம்? – டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

குரோர்பதிக்கும் புவியியலுக்கும் என்ன சம்பந்தம்? – டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை
டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

#9 முதன்மை தேர்வுக்கான பொதுப் பாடங்கள் – புவியியல்
இந்திய புவியியல் பகுதி 2

இப்போது நாம் பார்க்க இருப்பது இந்திய புவியியல் அமைப்பைப் பற்றி. அடிக்கடி கேள்விகள் கேட்கப்படும் மிக முக்கியமான பகுதி இது. இதில் வரும் பல தலைப்புகளை நாம் ஏற்கெனவே பள்ளியில் படித்தவைகள்தான். இன்னும் சில கூடுதல் தகவல்களோடு சேர்த்து பார்க்கப் போகிறோம் அவ்வளவு தான். இதில் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது இமாலய மலைகளை பற்றித்தான். மேற்கே இந்தஸ் நதி முதல் கிழக்கே பிரம்மபுத்திரா நதி வரையில் சுமார் 2,500 கிமி நீளமும் 240 முதல் 320 கி.மீ அகலமும் கொண்ட இமாலய மலைகளின் மொத்த பரப்பளவு 500000 கிமி^2. இந்த இமாலய மலைகளை ஹிமாத்ரி ( greater Himalayas ), ஹிமாச்சல் ( lesser Himalayas ) மற்றும் ஷிவாலிக்ஸ் என மூன்றாகப் பிரிக்கலாம்.

இதில் ஹிமாத்ரி மலைத் தொடரின் உயரம் சுமார் 6,100 மீட்டர்கள். இதில் சும்பி பள்ளத்தாக்கில் உள்ள ஜெலிப்பலா, சட்லஜ் பள்ளத்தாக்கில் உள்ள ஷிப்கிலா மற்றும் நேபாளத்தில் உள்ள எவரஸ்ட் சிகரம் உள்ளிட்டவை சில முக்கியமான இடங்கள். ஹிமாச்சல் மலைத் தொடர்களின் சராசரி உயரம் சுமார் 3,700 முதல் 4,500 கி.மி. இதில் முக்கியமான பிர் பாஞ்சல், தவுலதார் நாக் டிப்பா போன்றவை எந்தெந்த மாநிலங்களில், எந்தெந்த நகருக்கு அருகில் உள்ளன என்பனவற்றை நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதோடு சுற்றுலாத் தளங்களான சிம்லா‘, ராணிகேட், அல்மோரா, நைனிடால் போன்றவைகளைப் பற்றியும் கூடுதலாகத் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். சிவாலிக்ஸ் மலைத்தொடரிகளின் சராசரி உயரம் சுமார் 900-1200 மீட்டர் ஆகும்.

இமாலய மலைத்தொடரை பொறுத்தவரையில், அதில் அமைந்திருக்கும் முக்கிய மலைகளின் புவியியல் இருப்பிடங்கள் – ஏற்கனவே நாம் பார்த்துபோல (வரைபடத்தினை நம் மனதில் நினைவு கூர்ந்து பதில் சொல்லுமாறு) கேள்விகள் அமைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இந்தக் ‘குரோர்பதி’ நிகழ்ச்சியினை நாம் எல்லோரும் தொலைகாட்சியில் பார்த்திருப்போம். அதில் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ‘ ஃபார்ஸ்டஸ்ட் ஃபிங்கர்ஸ் ஃபர்ஸ்ட்’ என்று ஒரு போட்டியை முதலில் நடத்துவார்கள். அந்தக் கேள்விகளின் அமைப்பு பெரும்பாலும், ‘ வடக்கு முதல் தெற்கு வரை இந்த நகரங்களை வரிசைப்படுத்துங்கள்;’ மேற்கு முதல் கிழக்கு வரை இந்த மாநிலங்களை வரிசைப்படுத்துங்கள்’ என இருக்கும். அதேபாணியிலான (நிச்சயம் அதை விடக் கடினமாகவும் சவாலானதாகவும்) கேள்விகள் பல முறை UPSC மற்றும் TNPSC தேர்வுகளிலும் இடம் பெற்றிருக்கின்றன. வருங்காலங்களில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.

உதாரண கேள்வி:

#இவற்றை வடக்கு முதல் தெற்கு வரை வரிசை படுத்துக

1.ரஜொரி ( Rajouri )

2.மசூரி ( Mussoorie)

3.நைனிடால் ( Nainital )

4.ராணிகேட் ( Ranikhet)

1234

2341

1243 ( பதில்)

4123

இந்திய வரைபடத்தை அத்துப்படியாக வைத்திருந்தால் இதுபோன்ற மாதிரிக் கேள்விகளில் சிக்சர் அடித்துவிடலாம்.

அடுத்த முக்கியமான தலைப்பு, மகா இந்திய சமவெளி ( Great Indian Plains). இந்தஸ், கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதியின் அலுவியல் மண் படுவியல்களால் ( deposits ) உருவானதுதான் இந்த சமவெளி. இதனை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம். 1. பாபர் சமவெளி- சிவாலிக் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளவை. பெரும்பாலும் சரளைக் கற்களே அதிகம் இங்கு காணப்படும். 2. தெராய் சமவெளி – ஓடைகளும், காடுகளும் நிறைந்த பகுதி 3. பாங்கர் சமவெளி – பழமையான ‘அலுவியல்’ படுவியல்களை (கங்கர் என்னும் ஓடைக்கல்) உடையது. மிகவும் செழிப்பான பகுதி. 4. காதர் சமவெளி – புதிய ‘அலுவியல்’ பகுவியல்களை கொண்ட செழிப்பான பகுதி. 5. டெல்டா சமவெளி – காதர் சமவெளியின் நீட்டிப்பு, நதிகளுக்கு மிக அருகில் இருப்பதால் அடிக்கடி வெள்ள அபாயம் நிறைந்த பகுதி.

சமவெளிகளை மற்றொரு விதமாக ராஜஸ்தான் சமவெளி (தார் பாலைவனம்), இந்தஸ் சமவெளி (தோப் பகுதி), கங்கை சமவெளி, பிரம்மபுத்திரா சமவெளி எனப் பிரிக்கப்படுவதுண்டு. கங்கை மற்றும் பிரம்மபுத்திரா பகுதிகள் சுந்தர்பன் டெல்டா பகுதியில் சென்று முடியும் ( உலகிலேயே மிகப்பெரிய டெல்டா இந்த சுந்தர்பன் டெல்டா)

அடுத்து நாம் பார்க்கப் போகும் தலைப்பு, ‘ பெனின்சுலார் மேட்டு பகுதி’.16 லட்சம் கி.மீ பரப்பளவு, 600-900 மீட்டர் உயரம் கொண்டு வடமேற்கில் ஆரவள்ளி, வடக்கில் பண்டேல்கண்ட் , ராஜ்மஹால், தெற்கில் சாஹியதிரீஸ், கிழக்கில் கிழக்கு மலை தொடர்ச்சி, மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலைகளையும் கொண்ட பகுதி இது. இதில் உள்ள இடங்களை எல்லாம் தெளிவாக பார்த்து வைத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக, மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளை பற்றி கடந்த காலங்களில் UPSC மற்றும் TNPSC தேர்வுகளில் கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல, கிழக்கு கடற்கரை மற்றும் மேற்கு கடற்கரை ஆகியவை மற்றும் இந்தியாவை சுற்றி அமைந்துள்ள தீவுகள் ஆகியவற்றை பற்றி நன்கு தெரிந்து வைத்து கொள்ளுங்கள். மேலே குறிப்பிட்ட அனைத்து தலைப்புகளிலும் – அவை எந்த மாநிலங்களில் இடம்பெறுகின்றன. இந்தத் திசையில், புவியியல் அமைப்பிடத்தில் உள்ளவை; அவைகளின் சிறப்பம்சம் என்னென்ன என்பதைப் முழுமையாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

— நன்றி விகடன்

Copyright © 2023 KalviApp. All rights reserved.